ரவிராஜ் படுகொலையில் பிள்ளையான் குழுவிற்குத் தொடர்பு இருக்கலாம் என இலங்கையில் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. பிள்ளையானின் உதவியாளரான சுவிஸ் நாட்டில் வசிக்கும் சரண் என்பவருக்கும் இக் கொலைக்கும் தொடர்புகள் இருப்பதாக மேலும் தகவல்கள் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
கேணல் தரத்திலுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் பிரகீத் எக்னெலியகொட என்ற ஊடகவியலாளரின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி பிள்ளையானிடம் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாகியை வழங்கியதாகவும் அது பின்னர் சரணிடம் சென்றடைந்ததாகவும் டெயிலி நியூஸ் என்ற இலங்கை அரச ஊடகத் திணைக்களத்தின் நாழிதழ் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடற்படைச் சிப்பாய் ஒருவரிடம் அந்த ஆயுதம் வழங்கப்பட்டு அவரின் ஊடாகப் ரவிராஜ் கொலை செய்யப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கருணாவிற்கும் ரவிராஜ் படுகொலைக்கும் தொடர்பிருப்பதாக விக்கிலீக்ஸ் இல் வெளியான கேபிள் ஒன்றில் ஆதாரம் காட்டப்பட்டிருந்தது. கொழும்பிலிருந்து வாஷிங்டனுக்கு அன்றைய அமெரிக்கத் தூதர் ரொபேர்ட் ஓ பிளேக் அனுப்பிய மின்னஞ்சலில் இத் தகவல் ரொபேர்ட் ஓ பிளேக்கின் அனுமானமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவ்வேளையில் பிள்ளையான் கருணா பிளவு ஏற்பட்டிருக்கவில்லை.
ரவிராஜின் படுகொலை தொடர்பான விசாரணையை மகிந்த அரசு ஸ்கொட்லாண்ட் யார்ட் இடம் ஒப்படைத்திருந்த போதிலும் விசாரணை அறிக்கையை அந்த நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை.
விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே கருணா பிரான்ஸ் ஊடாக பிரித்தானியா சென்றடைந்தார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டார்.
கருணா – பிள்ளையான் – புலம் பெயர் ஆதரவுக் குழுக்கள் தொடர்பான மேலதிக சிக்கல்களை இலங்கை அரசு விசாரணைக்கு உட்படுத்துமா என்பது சந்தேகத்திற்கு உரியதே.
ஏகாதிபத்திய அடிமை அரசான இன்றைய இலங்கை அரசு தனது தேவைக்கொப்பவே ஜனநாயகத்தைத் தொட்டுக்கொள்கிறது.
பிள்ளையான் கைது செய்யப்பட்ட பின்னர் இனியொருவிலும் ஏனைய ஊடகங்களிலும் அது தொடர்பான செய்திகள் வெளியாகின. ஆங்கிலம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான இச் செய்திகள் பொதுவாக பிள்ளையானின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டவை. இனியொருவில் இச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பிள்ளையான் ஆதரவுக் குழுக்கள் இனியொரு மீதான அவதூறுப் பிரச்சாரம் ஒன்றை முடுக்கிவிட்டுள்ளன.
பிரான்சிலும் பிரித்தானியாவிலுமுள்ள தனி நபர்கள் சிலரால் இயக்கப்படும் இக் குழுக்கள் இனியொருவிற்கு மிரட்டல் விடுத்துள்ளன.
தாம் வாழுகின்ற நாடுகளின் வருமானவரி துறைகளுக்கு அச்சப்பட வேண்டிய இந்த மாபியக் குழுக்கள் இனியொருவை அச்சுறுத்துவது வேடிக்கையானது.
புலம்பெயர் நாடுகளில், குறிப்பாக பிரான்சில் இக்குழுக்கள் இணைந்து நடத்தும் பெரும் பணச் செலவிலான ஒன்று கூடல்கள், உரையாடல்கள், அவற்றின் பின்பான அவதூறுகள் அனைத்தும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து முற்போக்கு ஜனநாயக சக்திகள் தோன்றிவிடக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
சரணை கைதுசெய்ய உதவுமாறு சுவிஸ் அரசை இலங்கை அரசு கோரியுள்ளது. அவரைக் கைதுசெய்ய இயலாத நிலையில் விசாரணை முழுவதும் கிடப்பில் போடப்படுமா என்பது தெளிவில்லை. எது எவ்வாறாயினும் கருணா, பிள்ளையான் போன்ற துணைக் குழுக்களின் தேவை இலங்கை அரசைப் பொறுத்தவரை அவசியமற்றதாகிவிட்டது, இந்த நிலையில் பிள்ளையான் ஆதரவுப் புலம்பெயர் குழுக்கள் தொடர்பான முழுமையான விசாரணைகள் நடைபெறுமா என்பது முன் அனுமானிக்க முடியாத ஒன்றே.