இறுதிக்கால போர் அனுபவங்களை வெளிப்படுத்தும் இந்த நூலின் பல பாகங்கள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்திருக்கிறது. இலங்கையின் அதி முக்கிய போர்க்குற்றவாளிகளான மகிந்த மற்றும் கோத்தாபய ராஜபக்சக்கள் பிரதம அதீதிகளாகக் கலந்துகொள்ள இலங்கை சிங்கள பௌத்தக் கல்லூரியான ஆனத்தாக் கல்லூரியில் நூல் வெளியிடப்பட்டது.
மகிந்த ராஜபக்ச முன்வைத்த தீவிர பேரினவாத அரசியலின் தேவை இலங்கையின் வரலாற்றோடு மட்டுமன்றி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்போடும் இரண்டறக் கலந்த ஒன்று. ஆக, பேரினவாதத்தின் நேரடிப் பிரதிநிதியான மகிந்தவை இலங்கை அதிகார வர்க்கமும் அதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களும் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே நந்திக்கடலுக்கான பாதை என்ற நூல் கருதப்படலாம். சிங்கள பௌத்தத்தின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றான எல்லாளன் – துட்டகாமினி யுத்தத்தின் மனோ நிலையை மீட்கும் இது போன்ற குற்றவியல் நூல்களுக்கு எதிரான நேர்மையான மதிப்பீட்டை முன்வைக்கும் அரசியல் நூல் இன்று வரை தமிழர்கள் தரப்பிலிருந்து கூட வெளிவராமை தற்செயலானதல்ல.
விடுதலைப் புலிகளின் தலைவரின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் கைது செய்யப்படவில்லை எனக் கூறும் கமால் குணரத்னவின் நூல் எந்த அளவிற்கு நம்பகத் தன்மையற்றது எனத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இதற்கும் மேலாக பிரபாகரனைப் புகழ்பாடும் கமால் குணரத்ன இன் கூற்றுக்களால் புழகாங்கிதமடைந்த புலம்பெயர் தமிழ் அரசியல் வியாபாரிகள் தண்டிக்கப்பட வேண்டிய இராணுவத் தளபதியைப் புகழ் பாடுகின்றனர்.
இன்று இலங்கைப் பேரினவாத அரசின் அடிவருடிகளில் பலர் பிரபாகரனைப் புகழ் பாடுவதையே தமது வியாபாரத்தின் தொடக்கப்புள்ளியாகக் கருதுகின்றனர். இலங்கையின் இனக்கொலையாளியகட்டும், பேரினவாத அரசின் அடிவருடியாகட்டும், தேசியத்திற்கு எதிரான ஏகாதிபத்திய முகவராகட்டும் பிரபாகரன் புகழ் பாடினால், அவர்களது அரசியல் வர்த்தகத்திற்குப் பயன்பட்டுப் போகிறார்.
இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிபதியாக இருந்த காலத்தில் அதிகபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வரனினும் ஊழல் பேர்வளி ஐங்கரநேசனும் தேசியவாதியானது இவ்வாறே.