மக்களை அடையாளங்கள் ஊடாக உணர்ச்சியூட்டி அவர்களைச் சிந்திக்கவிடாமல் தடுத்து மந்தைகளாக வைத்திருப்பதே அதிகாரவர்க்கங்களின் நோக்கம். அதற்கு வியாபார ஊடகங்கள் தமது பங்கிற்குத் துணை செல்லும். மக்கள் தமது அடிப்படைப் பிரச்சனைகளை மறந்து தம்மை அறியாமலே அதிகாரவர்க்க அரசியலுக்குத் துணை செல்வார்கள்.
இன்று தேசிய வெறியை ஏகாதிபத்திய அரசுகளும் பயன்படுத்திக்கொள்கின்றன.
பிரான்சில் அமெரிக்க அடியாள் படையான ஐ.எஸ்.எல் நடத்திய தாக்குதலை அடுத்து அங்கு நாளை -27.11.2015- துக்கதினம் கொண்டாடப்படுகின்றது. பிரான்சில் எல்லா வீடுகளிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி கோரியுள்ளார்.
மூன்று வர்ணங்களிலான கொடியை பிரான்ஸ் முழுவதும் பறக்கவிடுமாறு பிரான்சுவா ஒல்லோந் உத்தரவிட்டுள்ளார்.
நூறுக்கும் குறவான பிரஞ்சு உறுப்பினர்களைக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எல் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக பிரான்சில் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது என்று அந்த நாட்டின் சட்டங்களை மக்களின் அடிப்படைச் சுதந்திரத்திற்கு எதிராக மாற்றியமைத்த பிரஞ்சு ஜனாதிபதி பிரஞ்சு மக்களின் தேசியம் குறித்து மணிக்கணக்கில் உரையாற்றுகிறார்.
மீளமுடியாத பொருளாதார நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் மக்களின் அரசிற்கு எதிரான உணர்வைத் திசைதிருப்புவதற்காக அச்சம் நிறைந்த சூழலும், தேசிய வெறியும் ஊட்டப்படுகின்றது,.அதேவேளை பிரன்சு அரசு நினைவு நாள் கொண்டாட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளது.
பற்றிகலான் அரங்கில் கொல்லப்பட்ட 88 பேரில் ஒருவர் ஔரெலி டு பெரெட்டி. அவருடைய தந்தையான ஜோன் மரி டு பெரெட்டி பிரஞ்சு அரசின் நினைவு தினத்தில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பாக முன்னதாகவே பிரஞ்சு அரசு தெரிந்துவைத்திருந்தும் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாமலிருந்தமையை எப்படி நியாயப்படுத்துவது எனக் ஜோன் மரி பெரெட்டி கேள்வியெழுப்பியுள்ளார். தவிர, சார்லி எப்டொ மீதான தாக்குதலுக்குப் பின்னர் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது அதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
கொல்லப்பட்டவர்களின் சகோதரரான ஒருவர், பிரான்ஸ் ஆளும்வர்க்கத்தைப் பலப்படுத்துவதற்குத் நாங்களும் துணை செல்லமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களையும் அடையாளங்களையும் முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டத்தின் பிடியில் வாழும் புலம்பெயர் சமூகம் பிரஞ்சு மக்களின் நேர்மையிலிருந்து கற்றுக்கொள்ள நிறையவே குவிந்திருக்கிறது.