Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் மருத்துவச் சங்கத்தின் மருத்துவ முகாம்கள் இடைநிறுத்தம்: வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன்

Murali-Vallipuranathanயாழ் மருத்துவச் சங்கம் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கஷ்டமான பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலவச மருத்துவ முகாம்களை வைத்தியர்களும் அடிப்படை வசதிகளும் அற்ற பிரதேசங்களில் 2013 இல் இருந்து நடாத்தி வருகிறது. முதலாவது மருத்துவ முகாம் 26.08.2013 முல்லைத்தீவு மாவட்ட குமுழமுனை பிரதேசத்தில் ஆரம்பித்து இது வரை 14 மருத்துவ முகாம்களை நடாத்தியது (விபரங்கள் பின்னிணைப்பு 1 இல் காட்டப்பட்டுள்ளது ). பல மருத்துவ நிபுணர்களும் மருத்துவர்களும் இந்த முகாம்களில் இலவசமாக தமது சேவையை வழங்கியதுடன் இன்று வரை 2500 க்கும் அதிகமானோர் இதன் மூலமாகஅனுகூலங்களைப் பெற்று இருக்கிறார்கள் .

மருத்துவ முகாம் நடக்கும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் பெரும்பான்மையான மருந்துகளை வழங்கி இருந்ததுடன் சில மருந்துகளை பங்குபற்றிய வைத்தியர்களும் பரோபகாரிகளும் வழங்கி இருந்தார்கள் . மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்வதற்குரிய வாகனம் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்டு இருந்ததுடன் வாகனத்துக்குரிய எரிபொருள் செலவுகள் யாழ் மருத்துவச் சங்கத்தினால் செலுத்தப்பட்டிருந்தது. இந்தச் செலவுக்கும் முகாம்களில் பங்கு பற்றும் ஊழியர்களின் உணவுச் செலவு மற்றும் மேலதிக மருந்து ஆகியவற்கு ஆரம்ப காலங்களில் சர்வதேச மருத்துவ சுகாதார சங்கமும் பின்னர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்தியர் சியாமளா அவர்களும் கன்பெர்ரா தமிழ் சங்கம் மற்றும் கத்தோலிக்க அமைப்புகள் ஆதரவு நல்கி இருந்தன.

இந்த நிலையில் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் மருத்துவ முகாம்களுக்கு வாகனத்தை தந்துதவ உயரதிகாரியான மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் உத்தரவையும் (இணைப்பு 2) மதிக்காமல் மறுத்து வருகிறார் . இதனால் இவரது சமூகப் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் காரணமாக மருத்துவ முகாம்களை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை மனவேதனையுடன் ஊடகங்களுக்கு அறியத் தருகிறேன். இதன் பிரதிகள் பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் உரிய ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் மருத்துவ முகாம்களை மீண்டும் தொடர்வதற்கு தயாராக இருக்கிறோம் .

இது தொடர்பாக Dr முரளி வல்லிபுரநாதன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மத்திய சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்தில் (http://www.health.gov.lk/en/vacancy/SAG.pdf இணைப்பு 3) குறிப்பிட்டவகையில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் என்னும் மருத்துவ நிர்வாக சேவையில் உள்ள பொறுப்பு வாய்ந்த முக்கிய பதவிக்கு சமுதாயத் தேவைகளை அறிந்து செயற்படக்கூடிய சமுதாய மருத்துவம்/மருத்துவ நிர்வாக முதுமாணி கற்கைநெறிகளை பூர்த்தி செய்த உரிய தராதரம் உள்ளவர்களை நியமித்தால் இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகள் எழாது என்று தெரிவித்தார்.

நிர்வாக கோவையின் விதிகளுக்கு அமைய ஒருவரை தற்காலிகமாகவேனும் ஒரு பதவிக்கு நியமிப்பதற்கு அவர் அந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்குரிய தராதரங்களை கொண்டிருக்க வேண்டும். புதிய பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி அற்றவர் என்று மத்திய சுகாதார அமைச்சு தெளிவாக சுற்று நிருபம் மூலம் வெளிப்படுத்தியுள்ள நிலையில் தகுதியுள்ள பல மருத்துவர்கள் இருக்கத் தக்கதாக மாகாண சுகாதார அமைச்சு சட்டவிரோதமாக இவரது நியமனத்தை ஏற்றுக்கொண்டிருப்பது நீதியரசரை முதலமைச்சராகக் கொண்ட வட மாகாண சபை நிர்வாகத்துக்கு ஒரு இழுக்காகும். இவ்வாறாக தொடர்ந்து தராதரம் அற்றவர்களை நியமனம் செய்வதன் மூலம் மாகாண சுகாதார சேவை சீர் கெட்டால் மாகாண சபை முறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் கெட்டுப் போய் விடும்

வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்
தலைவர் ,
யாழ் மருத்துவச் சங்கம்
ஆவணி 4, 2015

stopped medical camps

medical camp list

rdhs qualifications

Exit mobile version