கொக்குவில் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைக் குறியாக வைத்து 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 33 இராணுவக் கொமாண்டோகள் யாழ் பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தரையிறக்கப்பட்டனர். அவர்கள் தாக்கியழிக்கப்பட்டதன் நினைவாக பலாலி இராணுவ முகாமில் அவரக்ளின் பெயர்ப் பட்டியலுடன் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கொமாண்டொக்கள் அழிக்கப்பட்ட சில மணி நேரத்தினுள் பலாலியிலிருந்து புற்ப்பட்டு கொக்குவில் நோக்கிச் சென்ற இராணுவ கவச வாகன அணியொன்று அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்றது.
இன்று பலாலியில் அதே இராணுவக் கொமாண்டோக்களுக்கு அமைக்கப்படும் தூபி, இந்திய அரசின் தலையீடு இன்னும் தொடர்கின்றது என்பதற்கான அபாய அறிகுறி!
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன், 51வது டிவிசன் தளபதி பிரிகேடியர் எஸ்.கே.திருநாவுக்கரசு ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்றொழித்த இந்திய இராணுவம் பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டது. சிறுவர்களையும் இளைஞர்களையும் தெருவொரங்களிலும் முகாம்களுக்கு அருகாமையிலும் வைத்துக் கடத்திச் சென்று தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இராணுவக் குழுவை உருவாக்கிப் பயிற்சி வழங்கியது.
தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஊடாகவும், நேரடி இராணுவப் பயிற்சி ஊடாகவும் இந்திய இராணுவம் தீனி போட்டு வளர்த்த விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கும் நோக்குடனேயே இலங்கைகுச் சென்ற இந்திய இராணுவம் வடக்குக் கிழக்கில் நடத்திய இராணுவக் கொலைவெறியாட்டத்தின் பின்னர் 1990 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிச் சென்றது.