Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ற விசாரணை-விக்னேஸ்வரனின் தீர்மானம் தொடர்பான குறிப்பும் வேண்டுகோளும்

இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட, வன்னி இனப்படுகொலையின் போது, நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக, “சர்வதேச விசாரணை தேவை” என்ற குரல்கள் பரவலாக எழுந்துள்ளன. போர் தொடர்பான, சர்வதேச விதிமுறைகளை மீறிய காரணத்தால், “போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கை, முதலில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட போது, வன்னியில் நடைபெற்றது, இனப்படுகொலை என்ற கருத்து, அழிவுக்கு உள்ளானது.

அதன் பின்னர், கடந்த ஐந்து வருடங்களாக, “போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை மையப்படுத்தி, கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போர்க்குற்ற விசாரணை தொடர்பான, அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விசாரணை முடிவுகள், செப்டெம்பர் மாத இறுதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா சார்ந்த மேற்கு ஏகாதிபத்திய நாடுகள், இலங்கையில், தமக்கு ஏற்ற நிர்வாகிகளை ஆட்சியில் அமர்த்திய பின்னர், போர்க்குற்ற விசாரணை இலங்கை அரசாலேயே நடத்தப்படலாம் என்கின்றன.

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடத்துவது என்பது, கொலை நடத்திய அரச இயந்திரத்தை நோக்கி, விசாரணை நடத்துமாறு கோருவதாகும். தவிர, போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளிக்கும் சாட்சிகளின் பாதுகாப்பை, உத்தரவாதப்படுத்த எந்தப் பொறிமுறையும் இல்லை. ஆக, இலங்கையில் உள்ளேயே விசாரணை நடத்துவது என்பது, ஏமாற்று வேலை மட்டுமன்றி ஆபத்தானதுமாகும். இந்த நிலையில் “சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்” என்ற குரல்கள் பல்வேறு அரசியல் குழுக்களிடமிருந்து எழுகின்றன.

போர்க்குற்றவாளிகளில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், உரத்த குரலில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறார். தமிழரசுக் கட்சியின் தனி ஆதிக்கத்தால், புறக்கணிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ மற்றும் புளட் போன்ற அமைப்புக்கள், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணயே தேவை என்கின்றனர். அது மட்டும் அன்றி வடக்கு மாகாண சபையில் “சர்வதேச விசாரணையே தேவை” என‌ பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேசத்தில் அகதி உரிமை கோரி விண்ணப்பிக்கும் ஈழத் தமிழர்கள் பலர் போர்க்குற்றவாளிகள் என்ற காரணத்தை முன்வைத்து நிராகரிக்கப்படுகின்றனர். அத்துடன் மேற்குலக நாடுகளில், தற்போது, பிரஜாவுரிமை கோரி விண்ணப்பிக்கும் போராட்டத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பங்காற்றிய ஈழ தமிழர்களுக்கும், “விடுதலைப்புலிகளுடன் இணைந்து இயங்கியவர்கள்” என்பதனை காரணமாக முன்வைத்து, பிரஜாவுரிமை வழங்கப்படாமல் நிராகரிக்கப்படுகின்றது. ஆனால், இலங்கையில் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், இலங்கைத் தூதுவர்களாகவும், இராஜதந்திர அதிகாரிகளாகவும், ஏன் ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்திலும், ஐ.நாவின் சமாதானப் படைகளிலும் கூட வேலை செய்கின்றனர். ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய, அப்பாவிப் போராளிகள் ‘சர்வதேசத்தால்’ போர்க்குற்றவாளிகள் எனக் குற்றம் சுமத்தப்படுகின்றனர்.

சர்வதேசம் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்றவர்கள் குறிப்பிடும் நாடுகளே, இலங்கை அரசுடன் இணைந்து போரை நடாத்தி முடித்தது மட்டும் அல்லாமல், இனப்படுகொலைக்கும் துணை போயின. ஆக, உள்ளூர் கொலைகாரர்களிடமிருந்து, விசாரணையைப் பறித்து, சர்வதேசக் கொலைகாரர்களிடம் ஒப்படைப்பதே, தமது நோக்கம் என, புலம்பெயர் தேசியவாதிகளும், வெறும் கோசங்களை முன்வைப்பவர்களும் கோரி நிற்கின்றனர். அவ்வாறான சர்வதேச விசாரணை என்பது, வெறும் கோசங்களால் மட்டும் சாத்தியமற்றது எனத் தெரிந்துகொண்டே தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்.

இவர்கள், உரத்த குரலில், மணிக்கணக்கில், கூச்சலிடும் முழக்கங்களுக்குப் பதிலாக, போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான பொறிமுறை ஒன்றை, முன்வைக்க மறுக்கின்றனர். சர்வதேச நாடுகளால், இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றால், புதிய பொறிமுறை ஒன்றை, உலகத்திற்கு முன்னுதாரணமாக, நாம் ஏன் முன் வைக்க முடியாது?

அதிகாரவர்க்கத்தின் அடியாட்களையும், கொலையாளிகளையும், விசாரணை செய்ய அழைப்பதற்குப் பதிலாக, உலகின் மனிதாபிமானிகளையும், ஜனநாயக முற்போக்கு சக்திகளையும், கொண்ட விசாரணைக் குழு ஒன்றை, அமைக்குமாறு ஏன் ஐ.நாவிடம் கோர முடியாது? அப்படிப்பட்ட கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டால், உலகில் போர்க்குற்றங்களாலும், இனப்படுகொலைகளாலும், போரின் கோரத்தாலும், பாதிக்கப்பட்ட பல லட்சம் உலக மக்களிடம், இலங்கை அரசாலும், ஏகாதிபத்தியத்தாலும் வன்னியில் நடத்தப்பட்ட, இன‌படுகொலை பற்றி தெளிவு படுத்த‌ முடியும் என்பதுடன், அம்மக்கள் எதிர்கொண்ட படுகொலைக்கான விசாரணையை, நமது விசாரணையின் அடிப்படையில் விசாரிக்க ஏதுவாகவும் அமையக்கூடும். அதுவே ஈழப் போராட்டத்தின் நியாயத்தினை, ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உதவியாக அமையும்.

இது சாத்தியமற்றது என பிழைப்புவாதிகள் வாதிடலாம். ஆனால் சாத்தியமற்ற சர்வதேச விசாரணைக்காக, தீர்மானம் நிறைவேற்றி, மக்களை மீண்டும் நம்பவைத்து ஏமாற்றுவதற்குப் பதிலாக, சில சாத்தியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, புதிய திட்டத்தை முன்வைத்து, இக்குழுக்களால் போராட முடியாமலிருப்பதன் காரணம் என்ன?

இலங்கை அரசு, அமெரிக்காவின் முழு அடிமையாகிவிட்டது என்றால், தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள் அதன் அடியாள் படைகள் ஆகிவிட்டனர். இரண்டு பகுதிக்கும் பின்னால், அமெரிக்க ஏகாதிபத்தியமே தனது நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்றது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பகிரங்க ஆலோசனை:

“நீங்கள் அதிரடியாக நிறைவேற்றும் தீர்மானங்களுடன் கூடவே, சுன்னாகத்தில் அனல் மின்னிலையம் நடத்திய பல்தேசிய நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று, தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றலாமே? போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, சர்வதேச நாடுகளைக் கோரும் அதேவேளை, அனல் மின்னிலையத்தால் நஞ்சாக்கப்பட்ட நீர்ப் பரப்பைச் சுத்திகரிக்கவும் கோரிக்கை விடலாமே? அது மக்கள் மத்தியிலும், நேர்மையானவர்கள் மத்தியிலும், உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுடன், குற்றவாளிகளை தண்டிப்பதனூடாக மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதியை பெறவும் உதவும். அறிக்கை எழுதுவதற்கு தொலை தேசத்தில் ஆளில்லாமலேயே மக்களைப் பாதுகாக்கலாம்; வலிகாமம் பகுதியில், நீரையும் நிலத்தையும் அழித்த அவலம், உங்களைச் சார்ந்தவர்கள் மத்தியில், சூடான செய்திகளை பிறப்பிக்காமல் இருக்கலாம்; எனினும் மக்களுக்காக இதய சுத்தியோடு குரல்கொடுத்த மன நிறைவு ஏற்படும்.”

Exit mobile version