Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊழல் பெருச்சாளி ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றம் :காப்பாற்றிய விக்னேஸ்வரன் சரணாகதி

wiki_aingaranவாக்குப் பொறுக்கும் அரசியலுக்கும் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான்கு தசாப்த ஆயுதப் போராட்டத்தையும் அதன் இழப்புக்களையும் வட மகாண சபைக்குள்ளும், யாழ்ப்பாணத்தினுள்ளும் முடக்கி அழித்து வாக்குப் பொறுக்கும் அரசியல் கலாச்சாரத்தை மீள் கட்டமைத்த பெருமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், விக்னேஸ்வரனையுமே சாரும்.

வட மாகாண சபையின் ஊழல் பெருச்சாளிகளுள் அதி உச்ச பங்காற்றியவர் போ.ஐங்கரநேசன் என்பது குறிப்பிடத்தக்கது. சுன்னாகம் நச்சு நீர் தொடர்பான பிரச்சனையில் ஐங்கரநேசனின் ஊழல் தொடர்பாக இனியொரு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஐங்கரனேசன், சுன்னாகத்தில் அழிப்பை நடத்திய நிறுவனத்தைக் காப்பாற்ற போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாகாண சபையில் அதன் உறுப்பினரும் புளொட் அமைப்பைச் சார்ந்தவருமான கே.ரீ.லிங்கநாதன் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

இதற்கு முன்னதாக அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஐங்கரநேசனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போது, முதலமைச்சருக்கும் சிவஞானத்திற்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சீ.வீ.கே.சிவஞானம் சபையின் விதிகளை மீறி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக விக்னேஸ்வரன் குற்றம் சுமத்த, வாக்குவாதம் வலுவடைந்தது. இது முதல் தடவையாக விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒருவர் நடத்திய கடுமையான விவாதம் எனக் கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஐங்கரநேசன் முதலமைச்சருடன் இணைந்து சிவஞானம் மீதான சொற் தாக்குதல்களை நடத்தினார்.

இதன் பின்னரே ஐங்கரநேசனின் ஊழலுக்கு எதிரான பிரேரணை லிங்கநாதனால் முன்வைக்கப்பட்டது.

இரணைமடு நீர்பாசனத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பாதீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள், பளைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம், சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம், போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஐங்கரனேசன் மீது முதலமைச்சர் விசாரணை நடத்த வேண்டும் என லிங்கநாதன் தனது பிரேரணையில் கேட்டுக்கொண்டார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சீ.வீ.விக்னேஸ்வரன் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை முன்கூட்டியே அறிவிக்காமல் கொண்டுவர முடியாது என எதிர்ப்புத் தெரிவிக்க ஐங்கரனேசனும் எதிர்ப்புத் தெரிவித்தார். அத்துடன் இப் பிரேரணை அவைத்தலைவர் சிவஞானத்தின் திட்டமிட்ட செயல் என ஐங்கரநேசன் கூறியதும் மீண்டும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இவ்வேளையில் பல மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்து அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் இறுதியில் தவிர்க்கவ்பியலாத நிலையில் ஐங்கரநேசனின் குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்தவேண்டும் என முதலில் எதிர்ப்புத் தெரிவித்த முதலமைச்சர் பிரேரித்தார்.

மக்களுக்கு உண்மையை அறியும் உரிமையத் தொடர்ச்சியாக மறுத்துவரும் புலம்பெயர் ஊடகங்கள், இத் தகவலைத் திரித்து வெளியிட்டிருந்தன. தமது தேசிய வியாபாரத்திற்குத் தீனி போடும் விக்னேஸ்வரனைக் காப்பாற்றி மக்களுக்கு தகவல்களை மறைக்கும் வகையில், விக்னேஸ்வரனே ஐங்கரநேசனுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவந்தார் எனச் செய்திகள் வெளியிட்டிருந்தன.

Exit mobile version