அதே வேளை மைத்திரி ரனில் அரசின் வரவு செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்து வாக்களித்தமை தெரிந்ததே.
இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒரு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மட்டுமே.
ஆக, புதிய அரசியலமைப்பு என்ற தலையங்கத்தில் புதிய சுரண்டலுக்கான அமைப்பு ஒன்று இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வடக்குக் கிழக்கு உட்பட இலங்கையின் உழைக்கும் மக்களையும் வளங்களையும் சூறையாட கதவுகள் அகலத் திறக்கப்படும். ஆங்காங்கே எஞ்சியிருக்கும் தேசிய உற்பத்தி முற்றாக அழிக்கப்பட்டு சில வருடங்களில் இலங்கை வரண்ட பூமியாக மாற்றப்படும். மிகப்பெரும் ஏழை சமூகம் ஒன்று இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் தோன்றும்.
விவசாயம், மீன்பிடி, கைத்தொழில்கள் போன்ற அத்தனையும் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் வர்த்தக ஆதிக்கத்திற்கு உட்படும்.
கடனாளிகளான மத்தியதர வர்க்கமும், வறுமையின் பிடிக்குள் வாழும் உழைக்கும் மக்களும் இலங்கையின் தேசியச் சொத்தாகிவிடுவார்கள்.
வடக்குக் கிழக்கில் வறுமை கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தும். அதன் ஆரம்பத்தை இன்றே காணமுடிகிறது.
இலங்கை அரசுடன் இணைந்து அதன் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பேசும் மக்கள் மீது மட்டுமல்ல, முழு இலங்கை மக்கள் மீதும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
கொழும்பையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மட்டும் மற்றொரு சிங்கப்பூராக மாற்ற முயலும் புதிய அரசின் பொருளாதாரக் கொள்கை, வடக்கையும் கிழக்கையும் வறுமையின் பிடிக்குள் அமிழ்த்திவிடும்.
உலக நாணய நிதியம் (IMF) ஆழமாகத் தலையிட்ட நாடுகள் அனைத்தில் மரணத்தின் பிடிக்குள் மக்களை அனுப்பிவைத்தது. வறுமையையும் சீரழிவுகளையும் சொத்துக்களாக்கியது.
IMF இன் நிறைவேற்று இயக்குனராக கலாநிதி சபீர் கோர்கன் என்பவர் நியமிக்கப்பட்ட பின்னர் கடந்த வாரம் இலங்கைக்குச் சென்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்தார். நியமனத்திற்குப் பின்னர் அவர் பயணம் செய்த முதலாவது நாடு இலங்கை என்பதிலிருந்து அந்த நாட்டை எவ்வளவு பிரதான நண்பனாக உலகின் சுரண்டும் நாடுகள் கருதுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
உலகின் எல்லா நாடுகளின் சர்வதேச மூலதனத்தின் பகல் கொள்ளைக்கு எங்காவது ஒரு மூலையில் எதிர்பு ஆரம்பிக்கும். முழுமையான வலதுசாரிகளின் கைகளில் விழுந்த சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இன்று இலங்கை முழுவதையும் ஏகாதிபத்திய அடிமை நாடாக்கியுள்ளது.
சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரக் கரங்கள் இலங்கையின் குரல்வழையைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. அதுவும் தமிழ்த் தேசியத்தின் துணையோடு!
இலங்கையின் ஏகாதிபத்திய அடியாட் கட்சிகளுக்கு எதிராக தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கும் கட்சிகளோ தலைமைகளோ கிடையாது,
அவ்வாறான அரசியல் தலைமை தோன்றும் வரை இலங்கை தொடர்ந்து சூறையாடப்படும்.
மேற்கு ஏகாதிபத்தியங்கள் சுரண்டுவதற்காக ஏற்படுத்தப்படும் இன்றைய ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமையை உருவாக்குவதே இன்று எம்முன்னால் உள்ள கடமை.