Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசிற்குச் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடாது : கஜேந்திரகுமாரின் காலம் கடந்த ஞானம்

kajan_ponnampalamபொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் இதுவரை எவ்விதமான காத்திரமான முன்னெடுப்புக்களும் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ள கஜேந்திரகுமார், இவ்விடயத்தில் சர்வதேச நாடுகளும் ஐ.நாவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமென எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையே நிலவுவதாக கூட்டிக்காட்டியுள்ளார்.

முழுமையான பொறுப்புக்கூறலும் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வும் எட்டப்படாத வரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நீதியும் கிடைக்காதென கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்கால அரசியல் குறித்த எந்தவகையான முன்னோக்கிய சிந்தனையும் அறிவாற்றலும், சமூகம் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுத்திறனுமற்ற தமிழ் அரசியல்வாதிகளின் காலம் கடந்த ஞானம் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு கஜேந்திரகுமார் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் என்பன சிறந்த உதாரணங்கள். ஐ.நா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் துணை அமைப்புக்கள் இலங்கையில் பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே செயற்படும் என்ற ஆய்வுகளை இனியொரு உட்பட சில தமிழ் நாட்டு ஊடகங்களும் முன்வைத்தன.

இனியொரு சார்பில் இக் குழுக்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தப்பட்டன. இவற்றை எல்லாம் முழுமையாக நிராகரித்து ஏழுவருடங்களாக தமிழ்ப் பேசும் மக்களை அணிதிரட்டி மக்கள் சார்ந்த அரசியல் பொறிமுறை ஒன்று உருவாகுவதற்குப் பலர் தடையாகவிருந்தனர்.

இந்த கால இடைவெளிக்குள் இலங்கை அரசாங்கம் தனது நிலைகளைப் பலப்படுத்தி மக்களை அடிமைப்படுத்தியுள்ளது. ஒடுக்கப்படும் மக்கள் அதிகமாகப் பலவீனமடைந்துள்ளனர். போராட்டம் அழிக்கப்பட்டதன் பின்னதான சுத்திகரிப்பு நடவடிக்கை தமிழ்த் தலைமைகளின் துணையுடனேயே நடைபெற்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இன்னும் புதிய அரசியல் வழிமுறை என்பது முன்வைக்கப்படாவிட்டால் மிகக் குறுகிய கால எல்லைக்குள் மேலும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்.

Exit mobile version