சுன்னாகம் அனல் மின்னிலையப் பேரழிவை ஏற்படுத்திய நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா கொழும்பின் இருதயப் பகுதியில் உயர்குடிகளுக்கான உணவு விடுதியொன்றை ஆரம்பித்துள்ளார். பெரும் பணச்செலவில் ஐரோப்பாவின் பிரபல கோமெட் சமையலை இலங்கையில் அறிமுகப்படுத்தும் தேவா, ரனில் விக்ரமசிங்கவின் நீண்டகால நண்பர். நிர்ஜ் தேவா பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் நீண்டகால உறுப்பினர். ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர், சுன்னாகம் அனல் மின்னிலயைத்திலிருந்து தனக்கு 5000 யூரோக்கள் வரை வருமானம் கிடைப்பதாக தனது வருமானக் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதிபாரக் கழிவு டீசல் அதனைச் சுற்றியுள்ள பல மைல்கள் தொலைவு வரை நிலத்தையும் நீரையும் நாசப்படுத்தியுள்ளது.
சுண்ணாம்புப் படுக்கையின் மேல் வெளியாகும் யாழ்ப்பாண நீரில் இப்போது நச்சு இரசாயனப்படிவுகள் காணப்படுகின்றன. தெற்கே திருனெல்வேலி வரைக்கும் நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்த நிர்ஜ் தேவா இலங்கைப் பேரினவாதிகளுடன் இணைந்து நடத்திய திட்டமிட நிகழ்வே சுன்னாகத்திலிருந்து நடத்தப்பட்ட அழிப்பு என்ற சந்தேகங்கள் தோன்றுகின்றன. எமது திடீர்த் தேசியவாதி விக்னேஸ்வரன் அனல் மின்னிலையத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என ஆய்வுகளைக் கூட நிராகரித்து அறிக்கைவிடுத்து நிர்ஜ் தேவா உட்பட கொலைகாரக் கும்பல்களைக் காப்பாற்றினார்.
ஒரு நாடு இரண்டு தேசம் பிடிக்கும் கஜேந்திரகுமார், சுன்னாகம் மின்னிலையத்தை நடத்தும் நிறுவனம் பலம் வாய்ந்தது என்பதால் தம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்று கனடாவில் நடந்த சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
இன்று நிர்ஜ் தேவா எந்தச் சலனமும் இன்றி கொழும்பில் தனது உணவு விடுதியில் உயர்குடிகளுக்கு வெளினாட்டுச் சரக்கை வழங்கும் அதேவேளை சுன்னாகத்தில் மக்கள் நஞ்சு கலந்த நீரைப் பருகிக்கொண்டிருக்கிறார்கள்.
http://www.ft.lk/article/460313/%E2%80%9CElection-proves-Sri-Lanka-is-now-a-mature-democracy%E2%80%9D