Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

NGO கள் வெளியேற புலிகள் அனுமதி வழங்கவில்லை: ஐ.நா. அலுவலகப் பேச்சாளர்

வன்னியிலிருந்து செயற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அங்கிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதை விடுதலைப் புலிகள் தடுத்ததாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் தெரிவித்தார். 

 வன்னியிலிருந்து தமது பணியாளர்கள் சிலர் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் பயண அனுமதி வழங்காததால் அவற்றைப் பெறுவதற்கு மனிதநேயப் பணியாளர்கள் சிலர் அங்கு காத்திருக்கவேண்டி ஏற்பட்டதாக வெயிஸ் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.


அதேநேரம், வன்னியில் தமது குடும்பங்கள் இருப்பதால் சில மனிதநேயப் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறாமல் வன்னியிலேயே தங்கிவிட்டதாக வெயிஸ் குறிப்பிட்டார். “வன்னியிலிருக்கும் தமது பணியாளர்களை வெளியில் அழைப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். மனிதநேயப் பணியாளர்கள் பலருக்கு விடுதலைப் புலிகள் பயண அனுமதி வழங்காததால், அவர்கள் தமது குடும்பங்களுடன் வன்னியிலேயே தங்கிவிட்டனர். எனினும் அங்கிருந்து வெளியேற விரும்புவர்களை நாங்கள் அங்கிருந்து வெளியில் எடுப்போம்” என ஐ.நா. பேச்சாளர் குறிப்பிட்டார்.

வன்னியில் இயங்கிய அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிய 500ற்கும் மேற்பட்ட உள்ளூர் மனிதநேய உதவியாளர்கள் வன்னியிலிருந்து வெளியேறவில்லையென மனிதநேய அமைப்புக்களின் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களின் 21 மனிதநேயப் பணியாளர்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து பயண அனுமதி கிடைக்காததால் தொடர்ந்தும் வன்னியில் தங்கியுள்ளனர் என அந்த அமைப்பு கூறுகிறது.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணங்களை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக விநியோகிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாகவும், இதற்கு அங்கிருக்கும் உலக உணவுத் திட்டத்தின் தளபாட உதவிகள் பெறப்பட்டிருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வன்னியிலிருந்து வவுனியாவுக்கு இடம்மாறி செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இதுவரை தமது பணிகளை ஆரம்பிக்கவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Exit mobile version