Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

NGO களின் வெளியேற்றம்: கிளினொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்!

வன்னியிலிருந்து ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வெளியேறுவதைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாக நேற்று காலை 6 மணியளவில் கூடிய மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கிளிநொச்சியிலுள்ள யு.என்.எச்.சி.ஆர். நிறுவனப் பணிமனை, உலக உணவுத் திட்ட நிறுவனத்தின் பணிமனை என்பவற்றின் முன்பாக திரண்ட மக்கள் தொண்டு நிறுவனங்களை வெளியேற வேண்டாமெனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இராணுவ நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களும் ஏனைய மக்களும் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆ“ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில் பலர் ஐ.நா. அலுவலக அதிகாரிகளிடம் தமது நிலைமையினை எடுத்துக் கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.
சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளியேறினால் தம் மீதான தாக்குதல் தீவிரமடையும் என்றும் இதனால் தொண்டு நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேறக்கூடாது எனவும் மக்கள் ஐ.நா. அலுவலக அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பெண்கள் உட்பட பலர் கதறியழுது தமது கஷ்டங்களை வெளிப்படுத்தியதையடுத்து தங்களின் தலைமைப் பீடத்துடன் தொடர்பு கொண்டு மக்களின் கருத்துக்களை தெரியப்படுத்துவதாக உலக உணவுத்திட்டம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதையடுத்து குறித்த தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தமது வேலைத்திட்டங்களை இடைநிறுத்தி வெளியேறுவதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மோதல் காரணமாக இடம்பெயர்ந்து 25 பாடசாலைகளில் தங்கியிருந்த மக்களை தற்காலிமாக குடியேற்றும் வேலைத்திட்டத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தன.இந்தப்பணியும் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையினால் 5 பாடசலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை தற்காலிமாக மீள குடியமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்
 
 

 

 

Exit mobile version