முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட ஐரோப்பிய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும், கொலைகள் கச்சிதமாக நடைபெறுவதற்கு துணை சென்ற ஐ.நாவிடமும் நீதி பெற்றுத் தருவதாகக் கூறும் இக்குழுக்கள் சுயமாக மக்களைச் சிந்திக்கவிடாது தடுக்கின்றன. ஆங்காங்கே நடைபெறும் மக்கள் எழுச்சிகளையும் அவற்றின் விரிவாக்கம் மக்கள் போராட்டமாக முன்னெழுவதையும் தடுத்து நிறுத்துகின்றன. உலகம் முழுவதும் போராடும் மக்களோடு ஒடுக்கப்படுகின்ற தமிழர்களை அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக அதிகாரவர்க்கத்தோடும் அதன் கூறுகளான ஐ.நா போன்ற நாடுகளோடும் மட்டும் எமது போராட்டத்தின் 40 வருட காலத்தை மட்டுப்படுத்தும் இக் குழுக்களை எதிர்கொள்வதன் ஊடாகவே பேரினவாதத்திற்கும், ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமாக முடியும்.
உலகின் ஜனநாயகவாதிகளுக்கு மத்தியில் பின் தங்கிய மரபைக்கொண்ட அதிகாரவர்க்கத்தின் அடிவருடிகளாக தமிழ்ப்பேசும் மக்களை அறிமுகப்படுத்திக்கொண்ட இக் குழுக்கள் ஏற்னவே ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து மீள்வது நீண்டகாலப் பணி.
குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளிலிருந்து புலிகளின் அடையாளத்தின் ஊடாக நடத்தப்படும் இந்த அழிவுகளின் பிரதிநிதிகளாகளாக காலத்திற்குக் காலம் கவனமாகப் பல பிரமுகர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அந்த வரிசையில் அதன் பிந்திய பிரதிநிதி முன்னை நாள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் மனைவி.