Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆறாயிரம் பொதுமக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவும் கலை நிகழ்வும்

parai_voice_of_freedomஇன்று 18.05.2015 லண்டனில் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஆறாயிரம் பொதுமக்கள் கலந்துகொண்ட நிகழ்வு பிரித்தானியப் பிரதமரின் அலுவகலத்தின் முன்னால் நடைபெற்ற ஒன்று கூடலுடன் நிறைவுற்றது. லண்டன் சாரிங் குரோஸ் பகுதியில் மாலை 2 மணிக்கு ஒன்றுகூடிய பொதுமக்கள் பிரதம மந்திரியின் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையின் முன்னால் குழுமியிருந்தனர். மாலை 5 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. காணமல் போனவர்கள் தொடர்பான பிரச்சாரம் மேடையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பிரித்தானிய தமிழர் பேரவை நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து பறை விடுதலைக்கான குரல் என்ற அமைப்பு கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “வெறும் அஞ்சலிகளுடனும், நினைவுகூரல்களுடனும் நிறுத்திக்கொள்வதா? இழப்புக்களைப் புதிய போராட்டத்தின் படிக்கற்களாக மாற்றுவோம். முள்ளிவாய்க்காலில் மட்டுமா, சுன்னாகத்திலும், சம்பூரிலும் இனப்படுகொலை தொடர்கிறது. அதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராடுவோம். புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம். “என்ற முழக்கங்களுடன் இடம்பெற்ற பறை விடுதலைக்கான குரல் அமைப்பின் நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தமிழர்களின் தொன்மையை முழங்கும் பறை முரசுகொட்டி நடத்தப்பட்ட இந்த நிகவு ஆறாயிரம் மக்களுக்கும் ஒரு செய்தியைச் சொன்னது. எதிர்காலத்தை நோக்கிய கருத்தை முன்வைக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது.

பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வைக் குளப்பும் நோக்கத்துடன் மிரட்டல் பிரசுரங்கள் வெளியிடப்படிருந்தாலும், சிக்கல்களின்றி நிகழ்வு நடைபெற்றது.

Exit mobile version