ஏற்கெனவே எனது பதிவுகளில் முல்லைத்தீவு உட்பட்ட தமிழ்ப் பகுதிகளில் யுத்தம் 2009முடிந்த பின்பும் GMOA இன் வடக்கு கிழக்குக்கான தனியான நியமன அட்டவணை என்ற பெயரில் வடக்கு கிழக்கில் குறைந்த சேவைக்காலம் வேலை செய்தாலே மருத்துவர்கள் இட மாற்றம் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி தொடர்ச்சியாக மாற்றான் தாய் மனப்பாங்குடன் வடக்கு கிழக்கில் வைத்தியர்கள் பற்றாக்குறையை நீடிக்க செய்து வந்துள்ளதை குறிப்பிட்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக முன்னைய சுகாதார அமைச்சர் பிராந்திய பாகுபாட்டை நீக்கி மருத்துவர்களை நியமிக்குமாறு உத்தரவிட்ட நிலையில் அதற்கு இணங்க மறுத்து GMOA உள்ளக பயிற்சியை முடித்த மருத்துவர்களின் நியமனத்தை தடுத்து புதிதாக மருத்துவர்களை சேவையில்உள்வாங்கி நியமிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை கடந்த காலங்களில் பிரதியீடு இன்றி தென்பகுதி மருத்துவர்களை முல்லைத்தீவு மன்னார் உட்பட பல தமிழ்ப் பகுதி வைத்தியசாலைகளில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று பல்வேறு அழுத்தங்களையும் தொழிற் சங்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இந்த நாசகார செயலின் விளைவையே அதாவது புதிதாக மருத்துவர்களை உள்வாங்குவதை நிறுத்தி வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டதன் விளைவாகவே இன்று வடமாகாணம் எங்கும் கடுமையான மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகின்றதுடன் பல வைத்தியசாலைகளில் குறைந்தளவு மருத்துவர்கள் அதிகளவு நோயாளிகளை பார்ப்பதனால் மிக குறைந்த அளவு நேரமே சில இடங்களில் 3 நிமிடமே ஒரு நோயாளியுடன் செலவிடுவதாக சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதை விட 4 மருத்துவர்கள் இருக்க வேண்டிய பளை வைத்தியசாலையில் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரும் இல்லாத நிலையில் நோயாளியை பராமரிக்காமல் உயிரிழந்ததாக குற்றசாட்டு எழுந்ததையும் கவனிக்கவேண்டும். மருத்துவர்கள் பற்றாக்குறையினால் வடக்கில் MBBS தர மருத்துவரால் சேவை வழங்க வேண்டிய பல ஆரம்ப மருத்துவ நிலையங்களில் இளைப்பாறிய பட்டதாரிகள் அல்லாத RMO தர மருத்துவர்களினால் தரம் குறைந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலையே மிகவும் இழிநிலையாக குறைந்த அளவாக 7 மருத்துவ நிபுணர்களுடனும் 24 மருத்துவர்களுடன் பலவருடங்களாக இயங்கி வருவதற்கு மருத்துவர்களின் இடமாற்றத்தில் GMOA இன் தலையீடே காரணம் ஆகும். உதாரணமாக 2016 இல் மகப்பேற்று நிபுணர் (VOG ) இன்மையால் இலங்கையிலேயே கர்ப்பிணி தாய்மார் இறப்பு வீதம் அதிகமாக இருந்தபோது GMOA இன் மருத்துவ நிபுணர்கள் இடமற்றக்குழுவிடம் ஒரு VOG ஐ உடனடியாக நியமிக்குமாறு நான் கோரியபோது அவர்கள் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் தென் பகுதியில் உள்ள சிறிய ஆதார வைத்தியசாலைகளில் 2 VOG களை நியமிப்பதில் ஆர்வம் காட்டினார்களேயன்றி முல்லைத்தீவை முற்றாக புறக்கணித்தனர். இதே வேளையில் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த வைத்தியநிபுணர் பிரபாகரன் போன்ற ஒரு சில மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் தவிர்ந்த தென்பகுதியில் இருந்து சேவையாற்ற வரும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் 2 வாரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்வதும் பின்னர் 2 வாரங்கள் லீவு எடுக்காமல் வீடுகளில் தங்கி இருப்பதும் அனைவரும் அறிந்த ரகசியம் ஆகும் . உதாரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையை சேர்ந்த குழந்தை மருத்துவ நிபுணர் GMOA இன் அனுசரணையுடன் வாரத்தில் ஒருநாள் மட்டுமே வேலைக்கு வருகிறார் . இவ்வாறானவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முயன்றால் GMOA நிர்வாகத்தை தடுத்து நிறுத்தி தொழிற் சங்க நடவடிக்கை எடுப்போம் என்று பயமுறுத்துவதும் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்துள்ளது. உதாரணமாக கடந்த காலத்தில் சத்திரசிகிச்சை செய்வதற்குரிய மயக்கமருந்து கொடுக்கும் மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய பிரிவுகளில் வேலை செய்யும் மருத்துவர்கள் நாள் தோறும் பிரசன்னமாக இருக்க வேண்டும் என்று கோரிய சத்திரசிகிச்சை நிபுணர் மதுரகீதன் GMOA இன் அழுத்தத்தினால் இடமாற்றத்துக்கு உள்ளாகி இருந்தார்.
இந்த பின்னணியில் GMOA தனது செயல்பாடுகளாலேயே வடக்கின் மருத்துவ சேவை பாழ் பட்டு இருக்கிறது என்ற உண்மையை மறைத்து அந்த பழியை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஏனைய சுகாதார அமைச்சை சேர்ந்த நிர்வாகிகளை போலியாக குற்றம் சாட்டிவருகிறது. மேலும் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல ஒரு புறம் முல்லைதீவு கிளையை தூண்டி மருத்துவர்களை யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து அனுப்ப வேண்டும் என்று கோரும் வேளையில் யாழ் கிளையை தூண்டி முல்லைதீவுக்கு மருத்துவர்களை அனுப்புவதை தடுத்து நிறுத்தியுள்ளது (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது ). இவ்வாறான இரட்டை வேட செயல்பாடுகளின் பிண்ணனியில் மருத்துவர் காண்டீபன் தங்கராசாவும் அவரது சகபாடிகளும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதன் உச்சக் கட்டமாக மருத்துவர் காண்டீபன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதார பணிப்பாளராக பொறுப்பேற்று சுகாதார சேவையை மேம்படுத்துவதாக நாடகம் ஆடும் அதேவேளை வடமாகாண GMOA இணைப்பாளராக வடமாகாண சுகாதாரசேவையை பாழ் படுத்தும் அனைத்து சூழ்ச்சிகளுக்கும் உடந்தையாக இருக்கிறார். GMOA தனது அழுத்தத்தை பிரயோகித்து மாகாண மாவட்ட சுகாதார பணிப்பாளர்களினால் வெளிப்படையான அளவுகோலுடன் (OBJECTIVE CRITERIA ) கஷ்ட நிலையங்களாக அடையாளம் காட்டப்பட்ட அட்டவணையை நிராகரித்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை உட்பட வடக்கு கிழக்கின் பெரும்பான்மையான வைத்தியசாலைகளை இணைத்து கஷ்ட நிலைய நியமன அட்டவணையை தயாரித்து தொடர்ச்சியாக முல்லைத்தீவை இலங்கையில் சுகாதாரசேவை வழங்குவதில் கடைநிலையில் வைத்திருக்க நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த உண்மை நிலையை உணராத சில பொது அமைப்புகளும் GMOA இன் தூண்டுதலின் பேரில் அரசாங்கத்துக்கும் சுகாதார சேவை நிர்வாகிகளுக்கும் எதிராக வெகு ஜனப் போராட்டத்துக்கு மக்களை தூண்டி வருகின்றனர். இதை உணர்ந்து தமிழ் ஊடகவியலாளர்களும் ஆர்வலர்களும் அப்பாவி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி GMOA இன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த முன்வரவேண்டும். நன்றி!
Dr முரளி வல்லிபுரநாதன்
மருத்துவ பட்டப்பின்படிப்பு நிலைய சபையினால் சான்றளிக்கப்பட்ட சமுதாய மருத்துவ நிபுணர்