வங்க தேசத்தின் கியோச்குசின் துறைமுகத்தை நோக்கி நான்கு லட்சம் அகதிகள் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மியான்மாரிலிருந்து சென்றடைந்துள்ளனர். இவர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் ரோகின்கியா முஸ்லீம்கள். மியான்மார் பௌத்த மதம் சார்ந்த பாசிஸ்ட் அரச படைகளால் ரோகின்கியா முஸ்லிம்களின் உயிர்கள் அறுவடைசெய்யப்பட, தப்பியோடியவர்களின் அவலத்தை வங்கதேசத்து துறைமுகத்தில் அமைந்துள்ள மருத்துவ மனையில் காணலாம். குழந்தைகள்,
முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என எந்த எந்த வேறுபாடுமின்றி மிருகங்களைப் போல அவர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்.
மனித குலத்தின் மற்றொரு பகுதி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க, மேற்கின் மனிதாபிமானத்தின் மியான்மார் முகமான ஆங் சான் சூ கி மிருகவதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதுவரைக்கும் தனது கொல்லைப்புறத்தில் மனித இரத்தம் ஓடுவது குறித்து மூச்சுக்கூட விட்டிராத இந்தப் பெண்மணியின் நம்பிக்கையின் குரல் என்ற நூல் இன்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனையின் உச்சத்தில் தான் இருக்கிறது.
இவை அனைத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் இஸ்லாம் மத்தின் காவலர்களாகத் தம்மை உருவகப்படுத்திக்கொள்ளும் அடிப்படைவாதக் கும்பல்கள் ரோகின்கியா முஸ்லிம்கள் குறித்துக் கிஞ்சித்தும் துயரடையவில்லை.
அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான ஐஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகளோடு இணைந்துகொள்ள உலகம் முழுவதிலுருந்தும் படையெடுத்த இஸ்லாமியர்கள் மியான்மாரில் அதே இஸ்லாமியர்கள் கொல்லப்படும் போது காணாமல் போயினர்.
இதெல்லாம் போக, இப்போது சிறு தொகை இந்துக்களும் மியான்மார் அரசபடைகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய நாடான வங்க தேசத்தில் புகலிடமடைந்துள்ளனர்.
மோடியின் செல்லப்பிள்ளைகளான இந்துத்துவ பாசிஸ்டுக்கள் இதுவரை இது குறித்துப் பேசியதில்லை.
மதவாதமும், அடிப்படைவாதத் தேசியமும் அயோக்கியர்களின் ஆயுதமாகவே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்பட்டிருக்கிறது என்பதற்கு மியான்மார் இஸ்லாமியர்கள் ஒரு துயர்படர்ந்த குறியீடு.