இந்த ஆண்டு வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வழங்கும் 6 மாடிக் கட்டடத் தொகுதி அமைக்கும் வேலைகள் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் தளத்தில் உலங்குவானுார்தி (helicopter) இறங்கும் தளம் அமைக்கப்பட உள்ளது.
இதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் 5 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் வேலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைவிட மகப்பேற்று விடுதி கட்டடத் தொகுதியும் அமைக்கப்பட உள்ளதால் வைத்தியசாலையானது மிகவும் இட நெருக்கடியான நிலையில் இயங்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளது.
நாம் ஒரு கலாசாரத்துக்குப் பழக்கப்பட்டுள்ளோம். ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நோயாளியைப் பார்வையிட வருகின்றனர். இதனால் வைத்திய சேவையை வழங்குவதில் நெருக்கடி ஏற்படுகிறது. விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவரைப் பார்வையிட 4 அல்லது 5 பேர் ஒரே நேரத்தில் வருகின்றனர். பார்வையாளர் நேரத்தில் விடுதியில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதால் அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது. நோயாளிக்கு வழங்க வேண்டிய சிகிச்சையில் பாதிப்பு ஏற்படுகிறது. பிரசவ விடுதியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒருதாயை உத்தியோகத்தர்களால் கவனிக்க முடியாமல் போவதுடன் பிரசவத்தின் பின்னர் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்..
வைத்தியசாலையின் உட்பகுதி நடைபாதையினால்(கொரிடோரினால்) பொதுமக்கள் வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பார்வையாளர் நேரத்தில் அதிக அளவானவர்கள் கூட்டமாகச் செல்வதால் விபத்துக்குள்ளான மற்றும் அவசர சிகிச்சையளிக்க வேண்டிய நோயாளிகளை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு நடைபாதையினால் கொண்டு செல்வதும் மின்உயர்த்தியில்(லிப்ற்றில்) கொண்டு செல்வதும் நெருக்கடி மிக்கதாய் உள்ளது.
பொதுமக்கள் பின்வரும் நேரங்களில் நோயாளர்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். நோயாளிகளைப் பார்வையிடவும் உணவு வழங்கவும் இயன்றளவு இக்காலப்பகுதியில் வருகைதந்து சிறந்த வைத்திய சேவையயை வழங்க ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் பின்வரும் வைத்தியசாலை நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி.
…………………………………
வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி,
பணிப்பாளர்,
போதனா வைத்தியசாலை,