மெக்சிக்கோ சிற்றியில் கியூபப் புரட்சியாளனான பிடல் கஸ்ரோவைச் சந்தித்த போது அவரின் போராட்ட இயக்கத்தில் இணைந்துகொள்கிறார். கியூபப் புரட்சியின் இரண்டாவது முக்கிய தலைவராகச் செயற்பட்ட சே குவேரா, கியூபா அரசியல் பல முக்கிய பதவிகளை வகிக்கிறார்.
1965 ஆம் ஆண்டில் கியூபா அரசின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் வெளியேறி உலகின் ஏனைய நாடுகளில் புரட்சி செய்வதற்காகப் பயணிக்கிறார். ஆபிரிக்க நாடான கொங்கோவில் சே புரட்சிக்கான முயற்சி தோல்வியடைய, பொலீவியாவை நோக்கிச் செல்கிறார். அங்கு மக்கள் மத்தியில் அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது சீ.ஐ,ஏ உடன் இணைந்து பொலீவியப் படைகள் அவரைக் கைது செய்து கொன்றுபோட்டன,
மத்தியதரவர்க்கக் கல்விச் சமூகத்தில் பிறந்த சே வாசிப்பில் அக்கறை கொண்டவர். சே இன் வீட்டு நூலகத்தில் மட்டும் 3000 நூல்கள் இருந்ததகக் கூறுகின்றனர். மார்க்சியத் தத்துவத்தில் சே இன் ஈடுபாடு அங்கிருந்தே ஆரம்பமாகிறது. 1958 ஆம் ஆண்டு சீ.ஐ.ஏ சே தொடர்பான இரகசிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்தது. சே, ஒரு அறிவிசீவி என்றும், நன்றாக வாசித்து அறிந்துகொண்டவர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கியூபாவின் அரசியல் திட்டத்தை முன்வைக்கும் போது, கார்ல் மார்க்சின் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அதனை மேற்கொண்டதாக சே கூறுகிறார்.
குறிப்பான சூழ் நிலைகளில் வெற்றிபெற்ற கியூபப் புரட்சியில் முழுமையான புதிய ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த மக்கள் கட்டமைப்புக்கள் இருக்கவில்லை. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் ஒரு வகையான தேசிய அரசை நிறுவப் போதுமானதாகவிருந்தது.
1965 ஆம் ஆண்டு உலகத்தின் ஏனைய நாடுகளில் புரட்சிசெய்வதற்காக கியூபாவை விட்டு நீங்கிய சே இன் வழிமுறைகளிலும் அரசியலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
1960 ஆம் ஆண்டில் மா ஓ சேதுங் மற்றும் சே குவேராவிற்கு இடையேயான உரையாடலில் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தத்தைப் பாராட்டும் சே இன் அரசியல் மாற்றம் தென்படுகிறது.
போராட்ட சக்த்திகளிடமிருந்து சே இன் ஆளுமையை அகற்ற முடியாத சூழலில் சே இராணுவக் கோட்பாடு என்ற போலி நூலை சீ.ஐ.ஏ தயாரித்து வெளியிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
சே என்ற தனிமனிதனைக் கதாநாயகனாகக் கருதுவதற்குப் பதிலாக சே இன் அரசியலையும் அவரின் இறுதிக்கால அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் விமர்சன அடிப்படையில் எதிர்கொள்ளும் போதே அப்புரட்சியாளனுக்கான அஞ்சலி அர்த்தமுள்ளதாகும்.