தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை கண்டிய நடனத்திற்கு மட்டுமல்ல புத்தர் சிலைகளுக்கும் கூட எதிரானவர்கள் அல்ல. வரலாறு முழுவதும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் ஜனநாயகப் பண்புகளை அவர்கள் கொண்டிருந்திருக்கின்றனர்.
இன்று நிலைமை வேறானது. புத்தர் சிலை மற்றும் கண்டிய நடனம் போன்றன ஒடுக்குமுறையின் சின்னங்களாகவே சிங்கள பௌத்த மேலாதிக்க அதிகாரவர்க்கத்தால் பயன்படுத்தப்படுகின்றன.
சிறுபான்மைத் தேசிய இனங்களின் குறியீடுகள் மீதும் அடையாளங்கள் மீதும் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் பௌத்த சின்னங்கள் மீது சகிபுத்தன்மையுடன் நடந்துகொள்ளுமாறு சாமானிய மக்களைக் கோருவது என்பது நல்லிணக்கமாகாது.
இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து பேரினவாதத்தை வளர்க்கும் என சிங்கள மக்களை நோக்கி கோரிக்கைவிடுப்பதே மனோ கணேசன் போன்றவர்களின் இன்றைய கடமை.
ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடம் நல்லிணக்கத்தையும், ஒடுக்குமுறைக்கு எதிரான சகிப்புத்தன்மையையும் கோருவதைவிட ஒடுக்கும் தேசிய இனத்தைச் சார்ந்த அப்பாவிகளுக்கு அதிகாரவர்க்கத்தைத் தோலுரித்துக் காட்டுவதே நல்லிணக்கத்திற்கான முதல் படி.