இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விருதுவழங்கும் விழாவும் கௌரவிப்பு விழாவும் நேற்றைய தினம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் மேற்கண்டவாறு தெரிவித்தர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனும் கௌரவிருந்தினர்களாக அமைச்சர் திகாம்பரம் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் வன்னி மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் மாகாண, மாநகர உறுப்பினர்கள் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் மேலும் கூறியதாவது,
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் தமது உயிரைக் கூட தியாகம் செய்யுமளவிற்கு துணிந்து உயிரைப் பணயம் வைத்தவர்கள் ஊடகவியாளர்கள் ஆவர். அவர்களின் தியாகம் தமிழ் மக்களால் என்றும் மறக்கமுடியாதவொரு விடயமாகும். ஆயுதமேந்திப்போராடியவர்கள் ஒருபுறமிருக்கு மறுபுறத்தில் பேனாமுனையால் ஊடகவியலாளர்கள் போராடினார்கள்.
உண்மைக்கு சான்று பகரப்படவேண்டும். நீதிக்கு வழிவிடவேண்டும். தமிழ் மக்கள் உரிமையோடு வாழ வேண்டும். தன்மானத்தோடு வாழவேண்டும். அதற்காக அரசியல் யாதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வு வேண்டும். இந்த நாடானது போர் நடைபெறுவதற்குரிய நாடல்ல.இந்த நாடு பல்லினங்களைக் கொண்ட நாடு. பல கலாசாரங்களை, மொழிகளை, வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட நாடாகும். அதுமட்டுமின்றி பலவகையான பொருளாதார வளங்களைக் கொண்ட நாடாகும். இந்த நாடு சுதந்திரம்பெற்ற நாடு என குறிப்பிடுகின்றார்கள். ஆனால் சுதந்திரப் பெற்ற அன்றிலிருந்து இன்றுவரையில் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களின் இருப்புக்கு சவாலாக இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ் மொழி என்பது செம்மொழியாகும். இவ்வுலகத்தல் தமிழ் மொழிக்குரிய சிறப்பை சீன மொழி மட்டுமே கொண்டிருக்கின்றது. அதேநேரம் சமஸ்கிரதம் போன்ற பல பண்டைய மொழிகள் காலப்போகிக்கில் மருகியிருக்கின்றன. இருப்பினும் தமிழ் மொழியானது இன்னமும் தன்மை அழியாது செழுமையுடன் இருக்கின்றது. அதற்காக தலைநகரில் ஒரு சங்கமைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பது மிகப் சிறப்பானதொரு செயற்பாடாகும். அதேநேரம் முஸ்லிம் சமுகத்தினரும் தமிழ் மொழியை வளர்ப்பதில் பங்காளர்களாக இருக்கின்றார்கள். ஆகவே தமிழ் மொழியை பாதுகாத்து வளர்க்கும் செயற்பாடுகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் அனைவரும் ஒன்னிணைந்து தமிழ் மொழிவளர்ப்பில் ஈடுபடவேண்டும். இதற்காக ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
பிரிவினை வேண்டாம்
தமிழர்கள் சிதறிடிக்கப்பட்டள்ளார்கள். எமக்குள் சாதி, மாதம், சமூகம் என பல பிரிவினைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் கைவிடப்பட்டு அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும். மனிதர்களை மனிதர்கள் மதிக்க வேண்டும். எல்லா சமூகங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதனை விடுத்து உரிமைக்காக போராடுவதில் எந்தவிதமான பலமில்லை. ஆகவே பிவினைகளை நோக்கிய பழமைவாயந்த சிந்தனைகள் அனைத்தும் தோற்கடிக்கப்படவேண்டும். புதிய சிந்தனைகள் அடித்தளமிட்டு கட்டியெழுப்பபடவேண்டும். இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நடவடிக்கைகளை தமிழ் ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும்.
உண்மையின் முக்கியம்
சிலர் தாம் நினைப்பதே உண்மை. அதனையே அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என நினைக்கின்றாகள். அவர்கள் சிறிய வட்டத்திலேயே சிந்திக்கின்றார்கள். அது பொய்மையாகும். கடந்த காலத்திலிருந்த அரசியலில் இருந்தவர்களின் பிரச்சினையும் இதுவாகத்தான் இருந்தது. தாம் நினைப்பதே உண்மையென கருதினார்கள். அனை எல்லோரும் ஏற்க வேண்டும் என நினைத்தார்கள். அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும். உண்மையென்பது ஒருபோதும் பொய்யாக இருக்கமுடியாது. அது எல்லோருக்கும் சொந்தமானதாக இருருக்கவேண்டும். ஆகவே பொய்மையில் எமது வாழ்க்கையை கட்டியெழுப்பமுடியாது. ஆகவே ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் தமிழர்களுக்குரிய பாதையை, அதற்கான உண்மையை தெளிவாக அவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
சிறுபான்மை இனமல்ல
தமிழ் மக்கள் சிறுபான்மை இனமல்ல. அவ்வாறு கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அது தவறானதும் கூட. 1995ஆம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்தபோது அவரின் முன்னோர்கள் விட்டதவறுகளை விடவேண்டாம் கோரிக்கை விடுக்கும் கடிதமொன்றை எழுதியிருந்தேன். அதேநேரம் நாம் வரலாற்று ரீதியான ஒரு இனம். எமக்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஆகவே நாம் தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அக்கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன். இருப்பினும் அவ்விடயங்கள் தொடர்பில் கூடியளவில் கவனம் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
போரின் கொடுமை
போர் முன்னெடுக்கப்பட்டதில் உண்மையே முதற்கட்டமாக கொல்லப்பட்டது. புதைக்கப்பட்டது. உண்மை என்பது ஒளியாகும். அதன் பிரகாரம் பயணிப்பவராலேயே நேராக செல்லமுடியும். இல்லையேல் குறுகிய வட்டத்திற்குள்ளே மீண்டும் மீண்டும் சுற்றவேண்டியிருக்கும். யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்திருந்த மக்கள் மீது குண்டுகள் வீழ்ந்து இந்திருந்ததுடன் அவ்விடத்தில் பாரிய கிடங்குகள் ஏற்படத்தப்பட்டிருந்தன.
அவ்விடத்திற்கு நானே முதலில் சென்றிருந்தேன். அதன்போது பாதுகாப்பு தரப்பின் ஊடகத்தில் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாகவும் ஆயுதக்கிடங்கு தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுக்கொண்டிருந்தது. அத்தன்ருணத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தேன். நாட்டின் தலைவராக மக்களுக்கு வழிகாட்டவேண்டிய உங்களை அருகில் இருப்பவர்கள் உதவியாளர்கள் தான் இருளில் வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் யதார்த்த நிலைமைகள் தொடர்பில் தங்களுடைய ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருப்பதால் அவர்கள் மூலம் உண்மையை அறிந்துகொள்ள முடியும் எனவும் வலியுறுத்தினேன்.
தமிழ் மக்களை கொன்று குவிக்கும் போர் வேண்டாம். ஒரு சமாதனா நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும் என வெளிநாடுகளிடம் கோரினோம். பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரினும். குறிப்பாக நோர்வே பிரதமரிடம் வலியுறுத்தினோம். அதனை எழுத்துமூலமாகவும் அனுப்பினும். அவர் இங்கு வருகை தந்து பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஏமாற்றப்பட்டோம்
எமது அரசியல் கருமங்கள் அனைத்துமே ஏமாற்றப்பட்டதொரு நிலைமையாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறான நிலைமைகள் மாறவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என அவைரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என விரும்பினோம். அதன் அடிப்படையில் புதிய அரசாங்கம் அமைந்தது. இருப்பினும் சில செயற்பாடுகள் எமக்கு கவலையளிப்பதாகவே உள்ளது. குறிப்பாக சிங்கள மக்களுக்கு புளகாங்கீதம் ஏற்படவேண்டும் என்பதற்காக சில விடயங்களைக் கூறுகின்றார்கள். அவ்வாறான விடங்களை ஏன் கூறவேண்டும். ஆகவே அவ்வாறான விடங்கள் நிறுத்தப்படவேண்டும்.
சிங்களவரிடத்தில் கூறவேண்டும்
தமிழ் மக்கள் யார்? அவர்கள் என்ன விடயங்களை கோருகின்றாகள். அவர்களின் வரலாற்றுப் பின்னணி என்ன? அவர்களி;ன் மொழியின் செழுமை என்ன? போன்ற விடயங்களை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். அதற்காக இன்று ஊடகமொன்று காணப்படாதிருக்கின்றது. அவ்வறான ஊடகமொன்று உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் அக்கருத்துக்கள் கொண்டுசெல்லப்படவேண்டும் அதற்கான கருமங்களை ஊடகவியலாளர்கள் முன்னெடுக்க வேண்டும். தமிழர்கள் விடயத்தில் அறியாமையில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும்.
பொய்மை தவறு
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் தமிழ் மக்களுக்கு உரிமைகள் காணப்படுகின்றன. ஆனால் அது இங்கு இல்லை தமிழ் நாட்டிலேயே உள்ளது எனக் கூறுகின்றார். அமெரிக்காவில் வெள்ளையர்களை பிரித்தானியாவுக்கு செல்லுமாறு கூறமுடியுமா? அதேபோன்று அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களை அயர்லாந்துக்கு செல்லுமாறு கூறமுடியுமா? அவ்வாறு கூறப்பட்டு அவர்கள் சென்றார்களாயின் நீங்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும். சமயத்தலைவர்கள் பொய்மையை முன்னெடுப்பது தவறானதாகும்.
கட்சியாக பதிவு செய்யவேண்டும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும். குறிப்பாக ஏனைய தமிழ்த் தேசிய தலைவர்களையும் உள்டக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்வதன் அவசியத்தை அவர்களிடத்தில் கூறியிருக்கின்றேன். இதுதொடர்பாக நான் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தேன். அத்துடன் தற்போதும் தமிழ்த் தலைவர்கள் அவ்விடயத்தை முன்னெடுக்கவேண்டும் எனக்கோருகின்றேன்.
குறிப்பாக தமிழர்கள் செறிவாக வாழும் எட்டு மாவட்டங்களில் உள்ள அரசியல் பிரநிதிகள் ஒன்றுபடவேண்டியது மிக முக்கியமானதாகும். அனைத்து தமிழ் தரப்புக்களும் ஒன்றுபட்ட ஒரு காத்திரமான பலமிக்க அரசியல் கட்சியாக இருப்பது சிங்கள அரசியல் சக்திகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அவ்வாறில்லாது பிரிந்து தனித்தனியாக செயற்படுவதென்பது எமது எதிர்கலாத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடும். ஆகவே அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்பது மிகவும் முக்கியவிடயமொன்று என்பதுடன் இவ்விடயத்தை வலியுறுத்தியும் இச்சிந்தனையை வலுப்படுத்தியும் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும் என்றார்.