Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த தலைமையிலான பாதயாத்திரையின் பின்னணியில்…

mahindha_ralyமகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை இன்றைய செய்திகளில் பலரின் கவனத்தை ஈர்த்துக்கொண்டது. உலகின் அதி முக்கிய கிரிமினல் தலைவர்களுள் மகிந்த ராஜபக்சவிற்கும் பிரதான பாத்திரம் உண்டு. இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியதன் பின்பு இலங்கையைச் சூறையாடிய மகிந்த ராஜபக்ச இன்னும் சுதந்திரமாக உலாவருகிறார். வன்னிப் படுகொலைகளின் பின்னர் மகிந்த தண்டிக்கப்படப் போகிறார் என்ற மாயை அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகள், ஐ.நா சபை, மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அவற்றின் ஏவலாளிகளால் ஏற்படுத்தப்பட்டது. அமரிக்காவின் கைகளில் போராட்டம் ஒப்படைக்கப்பட்டதால் மக்கள் மத்தியிலிருந்தும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களிடமிருந்தும் எதிர்ப்பு மட்டுப்படுத்தப்பட்டது.

மிகவும் நயவஞ்சகத்தனமாகப் மகிந்தவிற்கு எதிரான போராட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட, சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும் அதனுடன் இணைந்தே அழிக்கப்பட்டது. இனப்படுகொலையை நிகழ்த்திய மகிந்தவும், அமெரிக்காவிடம் ஈழப் போராட்டத்தை ஒப்படைத்த போலித் தேசிய வாதிகளும் இன்னும் அரசியல் அரங்கில் பிரதான பாத்திரத்தை வகித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு முதலாவது ஆபத்தான விடையமாகும். போர்க்குற்றம் தவிர்ந்த ஏனைய ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவேனும் மகிந்த தண்டிக்கப்பட்டிருக்கலாம்.

உலகின் மிகப்பெரும் மனிதக் கொலையாளியைத் தண்டிக்க முடியாத அளவிற்கு இப்போதுள்ள அரசியல் பொறிமுறை தோற்றுப் போய்விட்டது என்று நொந்துக்கொள்ள இங்கு எதுவும் கிடையாது. மகிந்தவைக் காப்பாற்றவே உலகின் ஏகாதிபத்திய நாடுகள் இன்றுவரை முயன்று வந்திருக்கின்றன என்பதே இதன் பின்புலத்திலுள்ள நியாயம்.

இலங்கையில் ஒவ்வொரு முறையும் பேரினவாதம் தணியும் போது சிங்கள மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர்ந்து போராட முன்வருகிறார்கள். அதனால் இலங்கையில் பேரினவாதமும் அதனை அடிப்படையாகக் கொண்ட ஒற்றையாட்சிமுறையும், சிங்கள மக்கள் மத்தியிலான போராட்டங்களைத் தணிப்பதற்கு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச எந்த அச்சமுமின்றி இலங்கைத் தெருக்களில் அரசாங்கத்திற்கு எதிரான யாத்திரை ஒன்றை நடத்தமுடிவதற்குக் காரணம் இலங்கையில் பேரினவாதத்தைத் தீவிரவாதமாகப் பேணவேண்டிய தேவை அதிகாரவர்க்கத்திற்கும் ஏகாதிபத்தி நாடுகளுக்கும் தேவையானது என்பதாகும்.
இன்னும் நீண்டகாலத்திற்கு மகிந்தவும் அவரின் குடும்பமும் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்துவர் என்பதற்கு பாதயாத்திரை ஒரு முன்னுதாரணம்.

Exit mobile version