மேலும் அவர் தெரிவிக்கையில், அனைத்துலக அனுபவங்கள், நடப்புகள் மூலம் நோக்கும்போது ஒரு விடயத்தை குறிப்பிடலாம். பிரபலமான பயங்கரவாத இயக்கமொன்று தோல்வி கண்ட பின்னர் முன்பிருந்த பெயரிலோ வேறு பெயரிலோ தலைதூக்கலாம்.
இதற்கு சிறந்த உதாரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்த இயக்கம் வட ஆபிரிக்காவில் அல்கைதா அமைப்பாக செயற்பட்டது. இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பாக மாறியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வியை கண்டது. ஆனால் அதிலிருந்து தப்பிச் சென்ற பெரும்பாலானோர் மேற்கத்தேய நாடுகளிலும், தென்னிந்தியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் புலிகளாக செயற்படாமல் இருக்கலாம்.
ஆனால் அனைத்துலக புலிகளின் வலைப்பின்னலில் இணைந்திருந்தவர்கள், மீண்டும் புலிகளின் செயற்பாடுகள் தலைதூக்க இடமுள்ளது என்று கூறியுள்ளார்.
உலகில் போராட்டங்கள் அழிக்கப்படும் போதெல்லாம், அவற்றின் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு மீட்சி பெறும் வரலாறுகளும் எமக்கு முன்னால் காணக்கிடக்கின்றன.
போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்படுகிறது என மக்களை ஏமாற்றிய புலம்பெயர் குழுக்கள், ஜெனீவாவின் மூடிய அறைகளுக்குள் போராட்டத்தை அழித்தவர்களிடமே அதனை ஒப்படைத்தனர். ஆக, இன்று இலங்கையில் நடைபெறுகின்ற ஒவ்வோர் நகர்வும் மக்களை அழித்தவர்களின் ஆணைப்படியே நடைபெறுகின்றன. தமிழ் சிங்கள அதிகாரவர்கங்களின் கூட்டு நடவடிக்கை போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குத் தலையெடுக்க முடியாத சூழ் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ராஜபக்ச குடும்பத்தின் ஊதுகுழலாகச் செயற்பட்ட போர்க்குற்றவாளிகளில் டயான் ஜெயதிலகவும் ஒருவர். இன்றைய தமிழ்த் தலைமைகளும் புலம்பெயர் பினாமிக் குழுக்களும் ஏற்படுத்திய மாபெரும் அழிப்பில் எஞ்சியவற்றைச் சுத்திகரிப்பதற்கு டயான் ஜெயதிலக போன்ற சமூகவிரோதிகள் முயல்கின்றனர்.