Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன, சுரேஷ் கேட்பது நியாயமானதா?

sureshஉலகத் தமிழர் பேரவை, இலங்கை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் லண்டனில் திரை மறைவில் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக இனியொரு எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அரசியல் வாதிகளும் இது குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.

‘மேற்படி கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தவேண்டும். இல்லையேல் குறித்த இரகசிய கூட்டம் சர்தேச விசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியென்றே நாங்களும், மக்களும் தீர்மானிக்கவேண்டுமென’ தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புன் பேச்சாளரும் அதன் தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் இவ்வாறான கருத்தைத் தெரிவித்திருப்பது வேடிக்கையானது.

அதிகாரவர்க்கத்துடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவது சுரேஷ் உட்பட தமிழ் அரசியல் தலைமைகளுக்குப் புதித்தல்ல. இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும், இன்னும் உலகின் கொலைகாரர்களோடும் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வாக்குப் பொறுக்கிய மக்களிடமிருந்து மறைப்பது இது முதல்தடவையல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் தலைமைகள் ஆரம்பித்துவைத்த அரசியல் கலாச்சாரமே லண்டன் திரை மறைவுக் கூட்டமும்.

ஐ.நா வையும் அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்புங்கள், நாங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கிறோம் என்று மக்களை ஏமாற்றிய இக்கும்பல்களின் ஆதங்கம் தாமும் லண்டன் பேச்சுவார்த்தைகளில் இணைத்துக்கொள்ளப்படவிலை என்பதைத் தவிர வேறில்லை.

எரிக் சுல்கையிம் உட்பட, ஈழப் போராட்டத்தின் அழிவில் பங்காற்றிய மனிதர்கள் இணைந்து நடத்திய சந்திப்பு தமிழ் மக்களுக்கானதல்ல என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ சுரேஷ் போன்றவர்களின் அரசியலும் மக்களுக்கானதல்ல என்பதும் வெளிப்படையானது.

சுரேஷ் உட்பட அழிவின் பங்குதாரர்களான அனைத்துத் தரப்பினரும் தம்மைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு மக்களுக்கான அரசியலையும் செயல்திட்டத்தையும் முன்வைக்கட்டும். அவ்வாறாயின் மட்டுமே சுரேஷ் பிரமேச்சந்திரனின் ஆதங்கம் பெறுமானமுள்ளதாக அமையும்.

Exit mobile version