கடந்த மே மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி படு தோல்வியைத் தழுவியது. தொழிற்கட்சி கட்சி தோல்வியடைந்தமைக்கான காரணம் அவர்களின் இடதுசாரி சார்பு நிலையை என்றும், பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் என்பதும் கூறப்பட்டது. இந்த நிலையில் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு ஆதரவான வலதுசாரிப் போக்கைக் கொண்ட தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டும் என ஊடகங்களும், அரசியல் ஆலோசகர்களும், ஆய்வாளர்களும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இவ்வாறான சூழலில் தன்னை மார்க்சிஸ்ட் எனவும் சோசலிஸ்ட் எனவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஜெரமி கோபின் என்ப்வர் தொழிற்கட்சியின் தலைமைப் பதவிற்குப் போட்டியிட்டார். கடந்த ஜூன் மாதம் வரைக்கும் அறியப்படாதவராக் இருந்த ஜெரமி கோபின் இன்று ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளார். கார்டிவ் நகரில் நேற்று நடைபெற்ற ஜெரமி கோபின் இன் பொதுக்கூட்டம் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்குப் பிந்தய மிகப்பெரும் பொதுக்கூட்டமாகக் கருதப்படுகின்றது.
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் நலத்திட்டங்களை அழித்துவரும் இன்றைய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்று வழிமுறையை முன்மொழிந்த கோபின், பெரும் செல்வந்தர்களின் சட்டவிரோத நிதிக் கையாடல்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக சிக்கன நடவடிக்கைகளிலிருந்து மீள முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.
ஜெரமி கோபின் பாராளுமன்ற வழிமுறை ஊடாக சமூகத்தின் உழைக்கும் மக்களதும் தொழிலாளர்களதும் நலன் சார்ந்த ஆட்சியை நிறுவமுடியாது. ஆயினும் கோபினுக்கு மக்கள் வழங்கும் ஆதரவு மார்க்சியத்திற்கு மக்கள் வழங்கும் அதரவாகக் கருதப்படுகின்றது. கிரேக்கம், ஸ்பெயின், போத்துக்கல், பிரித்தானியா, இத்தாலி போன்ற நாடுகளில் மார்க்சிய அலை ஒன்று தோன்றி விரிவடைகிறது.
இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் அரசியல் தலைமைகள் பழமைவாத பிற்போக்கு கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் அதேவேளை ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் வலு அதிகரித்துவருகிறது.