2015 ஆம் ஆண்டு தேர்தலில் உணர்ச்சிவசப்படுத்தல்களுக்குக் குறைவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தாமே தேசியத்தின் காவலர்கள் என வாக்காளர்களைக் கவர முயல்கின்றனர். அதே வேளை ஏறத்தாள ஒரே வகையான அரசியல் முழக்கங்களை முன்வைக்கும் இரு கட்சிகளுமே தமக்குள்ளே அவதூறுகளையும் போலிக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றன.
இத் தேர்தலை முன்வைத்துத் துரோகியாக்கப்பட்டவர்களில் பிரதானமானவர் எம்.ஏ.சுமந்திரன். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் போன்றே கொழும்பை தளமாகக் கொண்டவர். இருவருமே 2009 இற்குப் பின்னான காலப்பகுதியில் தமிழ்த் தேசிய அரசியலை பாராளுமன்றம் செல்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியவர்கள்.
சுமந்திரனின் அரசியல் மக்கள் சார்ந்ததல்ல. அதிகாரவர்க்கம் சார்ந்தது. அமெரிக்காவும் இந்தியாவுமே சுமந்திரனின் பின்புலத்தில் செயற்படும் ஏவலாளிகள். இதன் மறுபக்கத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதே அரசியலையே முன்வைக்கிறார். சர்வதேசம் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காகச் செயற்படும் கஜேந்திரகுமார் சுமந்திரனை துரோகி எனப் பிரச்சாரம் செய்வதற்கு எந்தத் தகமயும் அற்றவர். ஒரே அரசியல் வழிமுறையை வரித்துக்கொண்டுள்ள இருவருக்கும் இடையேயான உள்முரண்பாடு வாக்கு வங்கியைப் பலப்படுத்திக்கொள்வதற்கான தந்திரோபாயமே தவிர வேறில்லை.
வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன் பாராளுமன்ற வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கு அப்பால் சிக்கலான மக்கள் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தவர். சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மையமாகக் கொண்டு அப்பகுதி நீரையும் நிலத்தையும் நாசப்படுத்திய பல்தேசிய வர்த்தக நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் மற்றும் பேரினவாத இலங்கை அரசிற்கு எதிராக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் வாய்திறக்க மறுத்தனர். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு படி மேலே சென்று சுன்னாகம் நீரில் நஞ்சு கலந்திருக்கவில்லை என அதன் அழிப்பின் சூத்திரதாரிகளைப் பாதுக்காக்க தன்னாலான அனைத்தையும் மேற்கொண்டார்.
கனடாவில் தேர்தலுக்கு ஆதரவு வேண்டி நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் மலேசிய நிறுவனமான எம்ரிடி வோக்கஸ் பலம்வாய்ந்தது என்றும் அதற்கு எதிராக தாம் செயற்பட இயலாது என்றும் கஜேந்திரகுமார் கையைவிரித்துவிட்டார். ஒரு தேசம் இரு நாடு பிடித்துத்தரும் பொன்னம்பலம் குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்திற்கு எதிராகக் கருத்துக்கள் கூட தெரிவிக்க மறுத்த நிலையில் சுன்னாகம் அழிப்பிற்கு எதிரான போரட்டத்தையும் பிரச்சாரத்தையும் தலைமையேற்று வழி நடத்தியவர்களுள் முரளி வல்லிபுரநாதனும் ஒருவர்.
முரளி வல்லிபுரனாதன் சமூக வலைத்தளம் ஒன்றில் பின்வரும் கருத்துக்களைச் சுமந்திரன் தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.:
“எனது வாழ்க்கையின் முக்கிய பகுதி ஒன்றை தற்போதைய சூழ்நிலை காரணமாக இன்று முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2009 ஆம் ஆண்டில் வன்னி முகாம்களில் பலவந்தமாக அடைத்து வைக்கப் பட்டு இருந்த தமிழ் மக்களின் சுகாதார நிலை தொடர்பாக கேள்வி எழுப்பி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதை தொடர்ந்து தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்குவதில் முழுமூச்சாக ஈடுபட்டு இருந்த இனவாத அரசினால் நான் பதவி இடைநிறுத்தம் செயப்பட்டு சம்பளமும் இன்றி 13 மாதம் அநாதரவாக இருந்த காலம். உறவினர்கள், நண்பர்கள் கூட தாங்களும் பழிவாங்கப் படலாம் என்று கருதி திருமண அழைப்பிதழைக் கூட தராத காலம். அந்த நேரத்தில் உதவி கோரி தற்பொழுது தமிழருக்காக வீர வசனம் பேசுபவர்கள் உட்பட பல தமிழ் தலைவர்களை அணுகி இருந்தேன். எந்த உதவியும் செய்யாமல் நல்ல வழக்கறிஜராக பார்த்து அமர்த்துங்கள் என்று ஆலோசனை கூறியோர் சிலர். நாட்டை விட்டு தப்பி ஓட்டுமாறு ஆலோசனை கூறியோர் சிலர் . இனப்படுகொலைஜன் மகிந்தவின் தமிழ் அடிவருடிகளை பிடித்து காலில் விழுந்து மீண்டும் பதவியை தக்க வைக்குமாறு கூறியோர் பலர் .
இறுதியாக முன் அறிமுகம் இல்லாத நிலையில் திரு சுமந்திரன் அவர்களை சந்தித்து உதவி கேட்டேன் .
சுமந்திரன் தானாகவே முன்வந்து எந்த வித கட்டணமும் இன்றி என்னுடைய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நடாத்தி தருவதாக தெரிவித்து அதன்படியே வழக்கை வென்று 13 மாத சம்பளத்துடன் என்னை மீண்டும் வேலைக்கு அமர்த்தினார் .
அவர் அன்று எனக்கு உதவி செய்து இருக்கவிட்டால் அனேகமாக 2010இல் இருந்து கனடாவில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தான் பணி புரிந்து கொண்டு இருந்து இருப்பேன்.
அவருடைய வீட்டுக்கு எனது வழக்கைப் பற்றிக் கதைக்க செல்லும் போது என்னைப் போல எத்தனையோ அநாதரவான தமிழர்களுக்கு அவர் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி உதவுவதை அறிந்து கொண்டேன்.
இத்தகைய உயர்ந்த மனிதரை இலக்கு வைத்து கேவலம் ஒரு தேர்தலில் வெல்லுவதற்காக, இனவாத அரசாங்கத்துடன் இணைந்து கடந்த காலத்தில் தமிழர் படுகொலையில் ஈடுபட்டவர்களைக் கூட கண்டிக்காமல், தமிழ் இனத் துரோகி என்று பட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? இந்தப் பதிவை பிரதி செய்து முகநூலில் மீள் பதிவிடவும் இணையத்தளங்களில் பிரசுரிக்கவும் நான் இத்தால் அனுமதி அளிக்கிறேன். “
இங்கு வேடிக்கை என்னவென்றால் போராளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கிய விக்னேஸ்வரன் தியாகியாகவும், சுமந்திரம் துரோகியாகவும் மாற்றப்பட்டதுதான்.
இக் கருத்துக்கள் சுமந்திரனின் அரசியலை நியாயப்படுத்தவில்லை. அதேவேளை கஜேந்திரகுமார் போன்ற வாக்குப்பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கு சுமந்திரனைத் துரோகியாக்க எந்த உரிமையும் இல்லை என்பதையே தெளிவுபடுத்துகின்றன.