Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க ஆசியுடன் கோத்தாபய இலங்கையின் அடுத்த ஜனாதிபதி?

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அமெரிக்காவின் ஆசியுடன் இனக்கொலையாளி கோத்தாபய ராஜபக்ச தெரிவுசெய்யப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு தடவைகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கோத்தாவைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு விடுத்த அழைப்பிற்கு பதிலளித்த கோத்தாபய, தான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்பதால் அப்பதவியை ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமில்லை எனத் தெரிவித்திருந்தார். அதே வேளை 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக அமெரிக்கக் குடியுரிமையை மீளப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் கோத்தா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய மகிந்த அரசின் மீதும், மகிந்த உட்பட அதன் நிர்வாகிகள் மீதும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாத மைத்திரி-ரனில் அரசு உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் புதிய அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்த நல்லாட்சி அரசின் மீது அதிருப்திகொண்ட சிங்கள அறிவுசீவிகள் குழுவினர், அடுத்த தேர்தலில் ஜே.வி.பி கட்சியை ஆதரிப்பதாக கூட்டறிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.
தவிர, மகிந்தவிற்கு எதிரான அணியினர் ஜே.வி.பி உடன் இணக்கப்பாட்டிற்கு வருவது தவிர்க்கமுடியாத அரசியலாகிவிட்ட நிலையில், உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் ஜே.வி.பி இற்கான ஆதரவு அதிகரித்துவருகின்றது.

ஜே.வி.பி இடதுசாரி முழக்கங்களை முன்வைக்கும் கட்சி என்பதால் அச்சடமடைந்த அமெரிக்கா, அரசியல் சூழலை எதிர்கொள்ள கோத்தாபயவை அடுத்த ஜனாதிபதியாக்க முனைப்புக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.

ஒரு புறத்தில் கோத்தாபய, மறுபுறத்தில் விக்னேஸ்வரன், மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பது அமெரிக்காவின் இன்றைய புதிய அரசியல் வியூகம் எனக் கருதப்படுகிறது.
இந்த அரசியலை முன்னெடுக்க புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் இந்திய இனவாதக் கட்சிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

Exit mobile version