Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கைதிகளை சிறையில் சாகடிக்க விரும்புகிறதா ‘நல்லாட்சி’ அரசு? : சி. கா. செந்திவேல்

sentilvelநல்லாட்சியின் பெயரிலான இன்றைய அரசாங்கம் நீண்ட காலமாக விசாரணையின்றிச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தொடர்ந்தும் மறுத்து வருகிறது. இதன் மூலம் அரசாங்கம் அவர்களைச் சிறைகளில் சாகடிக்க விரும்புகிறதா என்றே கேட்க வைக்கிறது. தமது விடுதலையைக் கோரித் தமிழ் அரசியல் கைதிகள் அடிக்கடி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னேடுத்து வந்துள்ளனர். தற்போதும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அதனால் அவர்களது உடல் நிலை மோசமடைந்து காணப்படுகிறது. தம்மை விடுதலை செய்யக் கோரும் அவர்களது போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும். இன நல்லிணக்கம், மனிதாபிமானம், ஜனநாயகம் பற்றி உரத்துப் பேசிவரும் மைத்திரி ரணில் அரசாங்கம், இந் நிலையிலாவது தமிழ் அரசியற் கைதிகளைத் தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை எமது கட்சி வற்புறுத்துகிறது.
இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, எமது கட்சியும் ஏனைய இடதுசாரி முற்போக்கு ஜனநாயக கட்சிகளும் அமைப்புகளும் இணைந்திருக்கும் அமைப்பான, அரசியற் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஊடாகத் தமிழ் அரசியற் கைதிகளை விடுவிற்பதற்கான பல்வேறுபட்ட வெகுஜன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அண்மையில் மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தோம். அன்றே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கும் சென்று தமிழ் அரசியல் கைதிகளின் அவல நிலை பற்றியும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வது பற்றியும் கலந்துரையாடினோம். இவற்றின் போது அரசியற் கைதிகளின் துரித விடுதலையை வேண்டினோம். அரசியற் கைதிகள் ஒவ்வெருவருக்கும் பின்னால் நீண்ட சிறைவாழ்க்கையின் சோகக் கதைகள் இருந்து வருகின்றன. அரசியற் கைதிகள் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உடல், உள நிலைமைகள் மோசமாக உடைந்துள்ளன். அவர்களின் பெற்றோரும் சகோதரர்களும் வாழ்க்கைத் துணைவர்களும் பிள்ளைகளும் நலிந்து போயுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலைக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டமே குறுக்கே இருந்து வருகின்றது. எனவே மேற்படிச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அண்மையில் இங்கு வந்து சென்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அரசியற் கைதிகளுக்குப் பொது மண்னிப்பு வழங்க முடியாது என்றும் சட்டப்படியே செயற்பட வேண்டும் எனவும் கூறிச்சென்றார். இதுவும் அரசாங்கத்திற்குச் சாதகமாகிக் கொண்டது. இவ்விடயத்தில் தமிழர் தலைமைகள் மௌனமாகவே இருந்து வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் மூன்று தடவைகள் அரசியற் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதை ஏன் தமிழ்த் தலைமைகள் வற்புறுத்த பின்னிக்கின்றன? பொது மன்னிப்பின் ஊடாகவோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைள் மூலமாகவோ தமிழ் அரசியற் கைதிகள் விடுவிக்கப்படக் கூடிய சூழல் இருந்தும் அதனை செயற்படுத்தாமல் அரசாங்கம் அசட்டைத் தனமாக இருந்து வருவதை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சி. கா. செந்திவேல்
பொதுச் செயளாளர்.

Exit mobile version