Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொண்டமனாறு கடற்கரையில் இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் – மௌனம் சாதிக்கும் தமிழ் தலைமைகள்!

யாழ்ப்பாணம், தொண்டமனாறு அக்கரைப் பகுதி மற்றும் வளலாய் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், வடமாகாணசபையோ, சுற்றுச்சூழல் அமைச்சோ வாய்திறக்காது மௌனம் காத்து வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த புதன் கிழமையிலிருந்து மருத்துவக் கழிவுகள், கண்ணாடிப் போத்தல்கள், ஊசி மருந்தேற்றும் சிறிஞ்சுகள், மதுபானப் போத்தல்கள், பாக்கு வகைகள் உட்பட பெருமளவான பொருட்கள் கரையொதுங்கி வருவதுடன், மீனவர்களின் வலைகளிலும் அகப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக இதுவரை வடமாகாணசபையோ, சுற்றுச்சூழல் அமைச்சோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவரவில்லை.

யாழ். நகரிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான சரியான முகாமைத்துவம் இல்லாத நிலையில் உள்ள வடமாகாண சபையினால் இப்பிரச்சனையை எவ்வாறு கையாளமுடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அத்துடன், வடமாகாண மக்களுக்கு உதவுவதற்கே யாழில் இந்தியத் துணைத் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளதாக பல மேடைகளில் முழங்கிவரும் இந்தியத் துணைத் தூதர் நடராஜன்  இது தொடர்பாக கள்ள மௌனம் காத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடந்தமை தொடர்பான சிக்கலில் எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனத்தை காப்பாற்றிய வட மாகாண சபையிடம் மற்றொரு மாசடைதலுக்கான பதிலை எதிர்பார்க்க முடியாது என்பது வெளிப்படை.

Exit mobile version