Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வலுவிழக்கும் அமெரிக்க ஏகபோக அதிகாரம்!

appleமுதலாளித்துவமும் அதன் உச்சபட்ச நிலையான ஏகாதிபதியமும் உலகை வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற பிரதேசமாக மாற்றியுள்ளன. முதலாளித்துவத்தின் நேரடிப் பாசிசப் பிரதிநிதிகளாக ஹிட்லர், முசோலீனி போன்ற உலகத் தலைவர்களும் அதன் உள்ள்ளூர்ப் பிரதிநிதிகளாக ராஜபக்ச போன்றவர்களும் உருவாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பாசிச அரசுகளையும் தலைவர்களையும் தோற்றுவித்த முதலாளித்துவம் உலகின் புதிய சந்ததியின் எதிர்காலத்தைக் கேள்விகுள்ளாகிவிட்டது. இதுவரை முதலாளித்துவ – ஏகாதிபத்தியத்தின் தலைமை மையமாகக் கருதப்பட்ட அமெரிக்க அரசுக்கும் அதன் துணை நாடுகளாகச் செயற்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவிய முரண்பாடுகள் இப்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.

புதிய முதலாளித்துவ முகாம்களாக சீனா – ரஷ்யா இணைந்த அணி தோன்றி வளர்ச்சியடையும் இன்றைய சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் துணை நாடுகளுகளான ஐரோப்பிய நாடுகளிடையேயும் புதிய முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

பெரும்பாலும் உலக வர்த்தக நிறுவனமே (WTO) ஏற்றுமதிப் பொருட்கள் தொடர்பான தர நிர்ணையத்தை மேற்கொள்கின்றது. அதனை மிகவும் இலகுபடுத்தும் நோக்கத்தில் ஐரோப்பாவிற்கு அமெரிக்காவிற்கும் இடையே அத்லாந்திக் வர்த்தக முதலீட்டு கூட்டமைப்பு (TTIP) என்ற ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருந்தது. பிரஞ்சுப் பிரதமர் பிரான்சுவா ஒல்லோந் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைக்கு எதிரான நீண்ட காலத்தின் பின்னான நேரடியான மோதல் இதுவாகக் கருதப்படுகின்றது. இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களுக்கு இனிமேல் அரசியல் ஆதரவு இனிமேலும் கிடைக்கப்போவதில்லை என வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பிரஞ்சு வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக ஜேர்மனியின் உதவி அரசுத் தலைவர் சிக்மார் கப்ரியேல் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் 14 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை 24 தலையங்கங்களின் நடத்திய போதிலும் எந்த விடையத்திலும் உடன்பாடுகாணப்படவில்லை.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஐரோப்பியர்களாகிய எமக்கு வாழ்வதற்கான எமது வழிமுறைகள் உண்டு. அமெரிக்கா தனது சொந்த சட்டத்தை எம்மீது செலுத்த முற்படுகிறது என்றார்.

அதே வேளை அப்பிள் நிறுவனம் 14 பில்லியன் யூரோக்கள் வரிப்பணத்தை ஏமாற்றியுள்ளதாகவும் அதனை மீள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. அதற்குப் பதிலளித்த அமெரிக்க திறைசேரி அப்பிள் நிறுவனத்தின் மீதான வரி நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இவ்வளவு தொகையை அப்பிள் நிறுவனம் செலுத்துமானால், அமெரிக்கவில் அந்த நிறுவனம் வரி செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அதனால் சாதாரண மக்களின் வரி வீதம் அதிகரிக்கும் என்றார்.

எது எவ்வாறாயினும், இலங்கை உட்பட ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க அத்தனை ஆயத்தங்களையும் மேற்கொள்ளும் அமெரிக்காவிற்கு எதிராக அதன் நேச அணிகளிடமிருந்தே எதிர்பாரத எதிர்ப்புக்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் அவற்றின் தலைமை நாடான அமெரிக்காவை முன்னெப்போதும் இல்லாதவாறு பலவீனப்படுத்தியுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் அமெரிக்கா ஏற்படுத்தும் அழிவிற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டங்கள் உலக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.

Exit mobile version