உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பணம் வழங்கி பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் பிரித்தானியா பிரதானமானது. பாதுகாப்புச் செலவீனங்கள் என்ற அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக சிரியாவிற்கு வழங்கப்படும் நிதி எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜூலியன் அசாஞ், எட்வார்ட் ஸ்னோடன் போன்றவர்கள் வெளியிட்ட ஆவணங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கும் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் உளவு அமைப்புக்களுக்கும் தொடர்பிருப்பதாக ஆதாரபூர்வமாகக் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியா போன்ற நாடுகளின் முதலாளித்துவ சர்வாதிகார அமைப்பு சரிந்து விழுந்துகொண்டிருக்கிறது. அங்கு வாழும் உழைக்கும் மக்கள் ஜனநாயக அமைப்பு முறை ஒன்றை நிறுவுவதற்கான போராட்டத்தை நடத்தத் தலைப்படுவார்கள் என பல ஆய்வாளர்கள் எதிர்வுகூறுகிறார்கள்.
முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக உழைக்கும் மக்களின் ஜனநாயாக அமைப்பு தோன்றுவதற்கான போராட்டங்களையும் எழுச்சிகளையும் கண்காணிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவேண்டிய தேவை பிரித்தானிய அதிகாரவர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் அவசரகால நிலை, அமெரிக்காவில் போலிஸ் சர்வாதிகாரம், ஜேர்மனியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என அனைத்திற்குமே இஸ்லாமிய தீவிரவாதம் காரணமாகக் கூறப்ப்பட்டாலும், அந்த நாடுகளின் அதிகாரவர்க்கம் மக்கள் மீதான இரக்கமற்ற தாக்குதலுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறது என்பதே உண்மை.