Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தினேஷ் நீக்கம்: ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் ஒப்புதல் வாக்குமூலம்!

ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியிலிருந்து அதன் பிரதான ஊடகவியலாளர் தினேஷ் நீக்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் சூழலில் பல்வேறு தளங்களில் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. தினேஷ் இற்கு முன்பதாகவே பல ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டு திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கருணாகரன், இரவி அருணாசலம், யோகா தினேஷ், பவித்ரா, அனாஸ்… போன்றவர்களின் இறுதியில் தினேஷ் இன் பதவி நீக்கம் முக்கியத்துவம் பெற்றமைக்கு இரண்டு பிரதான காரணங்களை உண்டு, முதலாவதாக தினேஷ் வெளியேற்றப்பட்ட போது அது ஐ.பி.சி இன் கொள்கை சார்ந்த பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது. ஏனையவர்கள் வெளியேற்றப்பட்ட போது அல்லது வேலை நேரக் குறைப்புச் செய்யப்பட்ட போது ஐ.பி.சி இழப்பில் இயங்குவதாகவும் அதனை ஈடு செய்வதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மாறாக தினேஷ் இன் வெளியேற்றம் தொலைக்காட்சி நிர்வாகத்தின் கொள்கை சார்ந்த பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது மட்டுமன்றி, நிர்வாகம் தனது கொள்கையை வரையறுத்த பின்னர் தினேஷை தொடர்பு கொள்வதாகவும் கூறப்பட்டது.

இரண்டாவதாக தினேஷ் முழுவதுமாக அரசியல் கோட்பாடு சார்ந்த விவாத நிகழ்ச்சிகளையே நடத்தி வந்தார். அதிலும் பொதுவாக இலங்கை அரசிற்கு எதிரானதும், சில வேளைகளில் அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான நிகழ்ச்சிகளே விவாதப் பொருளாக்கப்பட்டிருந்தன.

இறுதியாக 11.07.2018 நடைபெற்ற புது வெளிச்சம் விவாத நிகழ்ச்சியில் தினேஷ் இன் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ஐ.பி.சி தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் மறு நாளே தினேஷ் நீக்கப்பட்டார். அதே நாளில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பிற்கு தயார் செய்யப்பட்ட மற்றொடு விவாதம் ஐபிசி தொடர்பாகப் பேசாத போதும் அது ஒளிபரப்பப்படாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. அந்த ஒளிப்பதிவில் கலந்து கொண்ட அனைவரையும் ஐபிசி அவமானப்படுத்தியுள்ளது என்பது வேறு விடையம்.

தினேஷ் இன் வெளியேற்றம் என்பது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. முதலாவதாக இது கொள்கை அடிப்படையிலான வெளியேற்றம் என்பதால், முன்னதாக வெளியேற்றப்பட்டவர்களும் அதே அடிப்படையிலேயே நீக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரக் காரணங்களே அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டதா என்ற சந்தேகம்.

இனி, நீக்கப்பட்டமைக்கான காரணம் கொள்கை அடிப்படையிலானது என ஐபிசி நிர்வாகம் பொத்தாம் பொதுவில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தாலும், குறிப்பாக எந்தப்பகுதியை அது சார்ந்திருக்கிறது என்பதை குறிப்பிடவில்லை.

முதலில், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் சார்ந்ததா, ஊடக சனநாயகம் சார்ந்ததா, அதிகாரவர்க்க எதிர்ப்பு தொடர்பானதா என்ற குறிப்பான விளக்கத்தை ஐபிசி இடமிருந்து பெற்றாகவேண்டும்.

அதனை ஐபிசி தெளிவுபடுத்தினால் அதன் நிர்வாகத்தின் மீது சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க முடியும்.

ஐபிசி தொடர்பான மேலும் தரவுகளுடனான பதிவுகளை வெளியிடுவதற்கும் முன்பதாக வெளிப்படையான உரையாடலுக்கு ஐபிசி இன் ஏனைய ஊடகவியலாளர்களையும், நிர்வாகத்தையும் இனியொரு சார்பில் அழைக்கிறோம்.
ஊடகங்களின் நம்பகத்தன்மையை ஐபிசி கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது என்றால், அதன் இன்றைய ஊடகவியலாளர்களின் மவுனம்அருவருப்பானது.
தொடரும்..

Exit mobile version