அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமைய பிரதமர் பதவிக்கான எதிர்க்கட்சி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை நியமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் நண்பரும் இன்றைய அரசின் மின்வலு அமைச்சருமான சம்பிக்க ரணவக்க ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் பிரதானி. 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலமர்த்துவதில் முக்கிய பாத்திரம் வகித்தவர்களில் சம்பிக்க ரணவக்கவும் ஒருவர்.
கோத்தாபய ராஜபக்சவினால் கொலை செய்யப்பட்ட பிரகீத் எக்னெலியகொட என்ற ஊடகவியலாளரின் கொலைக்கும் சம்பிக்க ரணவக்கவிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆதாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
கோத்தாபயவிற்கு நெருக்கமான தாலித் ஜெயவீர, அசோக அபயகுணசேகர ஆகியோரே ஜாதிக ஹெல உறுமையவின் தூதர்களாக கோத்தாபய ராஜபக்சவிடம் சென்றதாகத் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல உறுமைய கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக வாக்குக் கேட்பதற்கு கோத்தாபய ராஜபக்ச பச்சைக் கொடி காட்டியிருப்பதாக செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
பேரினவாதிகள், அடிப்படைவாதிகள் போன்ற மனித குல விரோதிகளும் இனகொலையாளிகளும் அரசியலில் இருந்தும் சமூகத்தின் மத்தியிலிருந்தும் அகற்றப்படாமல் இன்னும் உயிர்வாழ்கின்றனர்.
அதிகார வர்க்கத்தில் நடபெறும் இத் தற்காலிக மாற்றங்களுக்குள் உள் நுளைத்துக் கொள்வதனூடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதிகாரவர்க்கம் தவிர்க முடியமல் வழங்கும் ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு மக்களை அணிதிரட்டத் தவறும் அரசியல் தலைமைகள் அழித்தவர்களிடம் மண்டியிடுவதை தேசியம் என அழைத்துக்கொள்கின்றன.