சுய நிர்ணைய உரிமைக்கான போராடத்தை அதிகாரவர்க்கத்தின் அரசியலாக உலகிக்கு அறிமுகப்படுத்திய போதே அதன் அழிவு ஆரம்பித்துவிட்டது. இன்னும் மீழ முடியாத அளவிற்கு அவர்களின் அரசியல் தொடர்கிறது. மக்களில் நம்பிக்கையுள்ள மக்கள் பற்றுள்ள புதிய சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு வெகு தொலைவிலேயே நாம் இருக்கின்றோம்.
ஒரு புறத்தில் இலங்கைப் பேரினவாத அரசின் அடிவருடிகள்; மறு புறத்தில் இலங்கை அரசிற்கு பின்னணியில் செயற்படும் சர்வதேச நாடுகள் என்று அழைக்கப்படும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள். அதனூடாக இலங்கை அரசிற்கு மறைமுக ஆதரவு வழங்கும் தமிழ்த் தேசியவாதிகள்; இவர்கள் அனைவரும் ஒரே அரசியலை வெவ்வேறு வழிகளின் முன்வைக்கின்றனர். இவர்கள் அனைவரும் மக்கள் சார்ந்தவர்கள் அல்ல.
மக்களுக்கு எதிரானவர்கள். வன்னிப் படுகொலை நடத்தி முடிக்கப்பட்டு ஆறு வருடங்கள் அமெரிக்காவோடு இணைந்து போர்க்குற்ற விசாரணை நடத்துகிறோம் என்று மக்களை ஏமாற்றியவர்கள் இன்னும் எந்தக் கூச்சமும் இன்றி நமக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.
ஒரு கொலை விழுந்தாலும் துடித்துப்போகும் மரபிலிருந்து வந்தவர்கள் நாம். இன்று ஒரு சமூகத்தின் அழிவிற்குக் காரணமானவர்கள் எமது மக்களைப் பற்றிப் பேசுவதற்கு அனுமதித்துக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறான ஒரு சூழலிலிருந்து தோன்றிய உலகத் தமிழர் பேரவை உட்பட அனைத்து அமைப்புக்களும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலில் இயங்க ஆரம்பித்துள்ளன.
உலகத் தமிழர் பேரவையின் பின்புலத்தில் அமெரிக்க அரச பணத்தில் செயற்படும் தன்னார்வ நிறுவனங்களும் செயற்படுகின்றன. தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எரிக் சூல்கையிம் புடைசூழ இலங்கை உலகத் தமிழர் பேரவை நடத்திய கூட்டத்தின் பின்ன மீண்டும் ஒரு ஒன்றுகூடலுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
இந்த ஒன்று கூடலில் பேர்கோப் பவுண்டேசனின் நிதியில் இயங்கும் Centre for Policy Alternatives (CPA) என்ற அமைப்பைச் சார்ந்த ஒருவரும், உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்தரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிம் சுமந்திரன் எம்.பியும் கலந்துகொள்கின்றனர். இலங்கை எதிர்நோக்கும் சவால்களும் சந்தர்ப்பங்களும் என்ற தலைப்பில் நடைபெறும் இக் கூட்டத்தை இமனுவெல் அடிகளார் தலைமை வகிக்கிறார். அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் கீழ் நடத்தப்படும் கருத்தரங்குகள் இன்று புலம்பெயர் தமிழ் அரசியலை ஆக்கிரமித்துள்ளன.
இரண்டு வாரங்களின் முன்னர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இதே போன்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அக் கருத்தரங்கில் பேர்கோப் பவுண்டேசனின் சார்பில் சுதா நடராஜா கலந்துகொண்டார்.
உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில்Centre for Policy Alternatives (CPA) ஐச் சேர்ந்த அசங்க வெலிக்கல என்பவர் கலந்துகொள்கிறார். கடந்தவருடம் ஒரு பேப்பர் நடத்திய ஊடகவியலளர் ஒன்றுகூடலில் Centre for Policy Alternatives (CPA) இன் நிறுவனரும், தலைவரும் பேர்கோப் பவுண்டேசனின் ஆளுனர்களில் ஒருவருமான பாக்கியசோதி சரவணமுத்து கலந்துகொண்டார்.
ஒரே அரசியலை வெவ்வேறு முனைகளில் நடத்தும் இக் குழுக்கள் பேர்கோப் பவுண்டேஷன் போன்ற தன்னார்வ அமைப்புக்களின் மையப்புள்ளியிலிருந்து இயக்கப்படுகின்றன.