இலங்கை அதிகாரவர்கத்துடன் இணைந்து உரிமைகளை வென்றெடுப்போம் எனக் கூறும் பாதிரியாரை எதிர்க்கும் அனைத்துத் தரப்பும் உலக அதிகாரவர்க்கத்தோடு இணைந்து விடுதலையை வென்றெடுபோம் என்கிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூகோள அரசியலைப் பயன்படுத்தி உலக அதிகாரவர்க்கத்திற்கு ஒரு வகையில் செம்பு தூக்கியே உரிமைகளைப் பெறலம் என்கிறது. இதனையே இன்னொரு வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூறுகிறது. புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் இதே வழிமுறையை முன்வைக்கின்றன.
ஆக அனைத்துத் தரப்புக்களுமே ஏதாவது ஒரு அதிகாரவர்க்கத்தின் தயவுடன் குறுக்கு வழிகளில் விடுதலையை வென்றெடுக்கலாம் எனக் கூறுகின்றன.
பாதிரியாருக்கும், ஏனைய அமைப்புக்களுக்கும் பண்புரீதியான வேறுபாடு எதுவும் கிடையாது.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் இதுவரை மக்களை நம்பி அவர்களின் பலத்துடன் உரிமைகளை வென்றெடுக்கும் வழிமுறை யாராலும் முன்வைக்கப்படவில்லை. கருத்தளவில் கூட இந்த வழிமுறையை நிராகரிக்கும் தன்னம்பிக்கையற்ற சமூகம் ஒன்று தோன்றியுள்ளது.
தன்னம்பிக்கையற்ற சமூகம் தமது கோழைத் தனத்தை தோற்றுப்போன வழிமுறைகளை மீளாய்வு செய்வதை நிராகரிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.
தென்னிந்திய அரசியல் பிழைப்புவாதிகளும், புலம்பெயர் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும், இலங்கை அரசியல்வாதிகளும் இக் கோழைத்தனத்தைப் பேணவே விரும்புகின்றனர். தன்னம்பிக்கை கொண்ட சமூகம் தோன்றுமானால் மக்கள் அணிதிரண்டு போராட முற்படுவார்கள். அது பிழைப்புவாதிகளின் தலைமையின் அழிவின் ஆரம்பமாகும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.