Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாபய சூறையாடிய பல பில்லியன் டொலர்கள் முன் கதை

gottaஉலக ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் ராஜபக்ச குடும்பம் நடத்திய இனவழிப்பு யுத்தத்தில் ராஜபக்ச குடும்பம் பல மில்லியன்களைக் கொள்ளையடித்து உலகின் பல மூலைகளிலும் பதுக்கி வைத்துள்ளது. சிங்கள மக்களின் நலன்களுக்காக நடத்தப்படும் யுத்தம் என அவர்களின் ஒரு பகுதியினர் நம்பவைக்கப்பட்டனர். முழு இலங்கை மக்களதும் உழைப்பையும் சூறையாடிக்கொண்ட அதிகாரவர்க்கம் யுத்தத்தைப் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான நடவடிக்கை என்று வெளிக்காட்டிக்கொண்டாலும், சிங்கள மக்கள் மீதும் பொருளாதார யுத்தம் ஒன்றை ராஜபக்ச அரசு கட்டவிழ்த்து விட்டிருந்தது.

வறுமையின் சுமையால் தற்கொலை செய்துகொள்கின்ற நாடுகளில் இலங்கை முன்ன்ணியில் திகழ்ந்தது. இன்று ராஜபக்சக்களின் தேவை முடிந்து போன பின்னர், சிரிசேனவின் ஆதரவில் ஏகாதிபத்தியங்களின் சூறையாடல் தொடர்கின்றது.

யுத்தத்திற்குச் சற்று முன்பதாக 2006 ஆம் ஆண்டில் ராஜபக்ச அரசு இராணுவத் தளபாடங்களையும், போர்க் கருவிகளையும் வாங்கிக் குவித்தது. இந்த வகையில் நான்கு MIG-27 ரக விமானங்களை இலங்கை அரசு வாங்கியிருந்தது.

இந்த விமான கொள்வனவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக சண்டே லீடர் ஊடகம் தெரிவித்திருந்தது, அதன் பின்னர் கோத்தாபய ராஜபக்சவினால் மிரட்டப்பட்ட ஊடகம், ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது. சண்டே லீடருக்கு எதிராக கோத்தாபய ராஜபக்ச தாக்கல் செய்த அவதூறு வழக்கின் பின்னர் தமது தகவல்கள் தவறானவை என ஊடகம் மன்னிப்புக் கோரியிருந்தது.

2006 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த கோத்தாபய ராஜபக்ச ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், உக்ரையின் அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான ஒப்பந்த அடிப்படையிலேயே கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவித்திருந்தார், இதனை இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையாகவும் வெளியிட்டிருந்தது.

பிரித்தானியாவின் வேர்ஜின் தீவுகளில் பல்வேறு போலி நிறுவனங்களை நடத்தி வரிவிலக்குப் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது. அங்கு Bellimissa Holdings என்ற போலி நிறுவனத்தை ஆரம்பித்து அந்த நிறுவனத்திற்கே விமானத்திற்கான பணமான 10.078 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரையின் அரசிற்கும் இலங்கை அரசிற்கும் எந்த வகையான நேரடிப் பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை ஆக, பாதுகாப்பு அமைச்சு நாட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பல பில்லியன்களை சுருட்டிக்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என பகிரங்கமாகக் கூறி ஊடகங்களை மிரட்டிய கோத்தாபய, இன்று ஊழல் நடைபெற்றிருந்தால் அதற்கு விமானப் படைத் தளபதியே பொறுப்பு என்றும் தமக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Bellimissa Holdings என்ற நிறுவனம் லண்டனில் பதிவு செய்யபட்டிருப்பதாக முகவரி ஒன்று வழங்கப்பட்டிருந்தாலும் அது போலியானது எனத் தெரியவந்துள்ளது. தவிர, 2006 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் நிதி நிர்வாகம் கோத்தாபயவின் பொறுப்பிலேயே இருந்தது.

கொள்வனவு செய்யப்பட்ட விமானங்கள் பழுதடைந்தவை எனவும், 2000 ஆம் ஆண்டிலேயே இவ் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கைப் பாதுகாப்ப் அமைச்சு மறுப்புத் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஒரு நாட்டின் அரசு மிகப்பெரும் தொகைப் பணத்தை மக்களிடமிருந்து கொள்ளையிட்டு பத்து ஆண்டுகள் மக்களை ஏமற்றி வந்திருக்கிறது. தமது சொந்க நலன்களுக்காக வன்னிப் படுகொலைக் கோரத்தை நடத்தி முடித்த ராஜபக்ச குடும்பம் இன்னும் மக்கள் மத்தியில் தலைவர்களாக உலா வரும் அதே வேளை இவர்களுக்கு எதிராகப் போராடிய ஆயிரக் கணக்கானவர்கள் சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

வெறும் பணத்திற்காக நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகளின் பின்னர் தமிழர் தரப்பினரும் சிறைகளில் வாடும் அப்பாவிப் பொது மக்களையும் போராளிகளையும் கைவிட்டு வெற்று வீர வசனங்களோடு உலா வருகின்றனர்.

Exit mobile version