Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீபன் திரைப்படத்தை வரவேற்கும் இலங்கை அரசு

dheepanதமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களின் தலைமைகளால் அன்னியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மண்ணின் நிழல் கூடப் படாத அன்னிய அதிகார சக்திகள் ஈழப் போராட்டத்தைத் தமது தேவைக்கு ஏற்றவகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஈழப் போராட்டம் என்பது பயங்கரவாதம் என்றும், வன்முறை மீது விருப்புக் கொண்ட மன நோயாளிகளால் நடத்தப்பட்டது என்றும் உலகம் முழுவதும் கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன.

இதன் மறு பக்கத்தில் வடக்குக் கிழக்கு, பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சூறையாடலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் ஏகாதிபத்திய நாடுகளின் தங்குமடமாகி வருகிறது.

இதற்காக உலகத்தின் பொதுப்புத்தி ஒன்று திட்டமிட்டுத் தயாரிக்கப்படுகிறது. இந்த வகையில் பிரான்சில் கான் திரைப்பட விழாவில் பால்ம் விருதை வென்றுள்ள பிரஞ்சுத் திரைப்படமான தீபன் வெளியாகியுள்ளது.

இத் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்தினர் என்ற தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இலங்கை அரசு தீபன் திரைப்படத்தை வரவேற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை இத்திரைப்படத்தின் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என இலங்கை அரச துறைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் கடந்தகாலத் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவை மீண்டும் நிகழாதவாறு புதிய அரசியல் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு தமிழ்த் தலைமைகள் தயாரில்லை.. ஒரு புறத்தில் ஈழப் போராட்டம் என்பதையே தவறு என்கிற ஒரு கூட்டமும், ஈழப் போராட்டத்தில் தவறுகளே நிகழவில்லை என்ற மற்றொரு கூட்டமும் தீபன் போன்ற திரைப்படஙக்ளுக்கு வழியைத் திறந்துவிட்டுள்ளன

ஈழப் போராட்டத்திற்கான அடிப்படை நியாயத்தைக் கூட தவறுகளைக் காரணம்காட்டி இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையே இது.

தவறுகளைச் சுய விமர்சனம் செய்துகொண்டு, அவற்றிலிருந்து புதிய போராட்ட நடைமுறைகளை முன்வைப்பதற்கு தமிழ் அரசியலைக் கையில் வைத்திருக்கும் தலைமைகள் தயாரில்லை. இதனால் தவறுகளைப் பயன்படுத்தி போராட்டத்தின் நியாயத்தையே மறுக்கும் பேரினவாத சக்திகள் பலன் பெறுகின்றன.

புலியெதிர்ப்புக் கும்பல்களும், புலி ஆதரவுக் கும்பல்களும் நடத்தும் நாசகார அரசியல் நிராகரிக்கப்பட்டு புதிய அரசியல் விமர்சனம் சுய விமர்சன அடிப்படையில் முன்வைக்கப்படும் வரை அழிவுகளை நிறுத்த முடியாது.

இஸ்லாமிய வெறுப்புவாதத்தை வளர்க்கும் ‘தீபன்’ : வாசுதேவன்

Exit mobile version