இலங்கையில் பாராளுமன்றத் இன்று கலைக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கையெழுத்திட்டுள்ள வர்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இலங்கையில் வாழும் மக்களுக்கு இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். தவிர, 17ம் திகதி ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜூலை 6ம் திகதிக்கும் 13ம் திகதிக்கும் இடையில் நியமனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இரண்டு பெரும் கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேதல் பிரச்சாரங்களை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த அணி மற்றும் மகிந்தவின் எதிரணி என்ற இரண்டு பிரிவுகள் உருவாகியுள்ளன. இப் பிளவு ஐ.தே.கவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதால் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை அக்கட்சி விரும்பியிருந்தது.
வெளிப்படைத் தன்மை, நல்லாட்சி என்ற முழக்கங்களுடன் ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்திய மைத்திரிபால சிரிசேன, உலகின் மிகபெரும் படுகொலைகளில் ஒன்றான வன்னிப் படுகொலையின் சூத்திரதாரிகளையும், இலங்கையைச் சூறையாடியவர்களையும் சுதந்திரமாக உலாவர விட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் அச்சமடைந்திருந்த மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர், தமக்கென புதிய அணியொன்றை உருவாக்கிக் கொள்ளுமளவிற்கு நல்லாட்சி ஜனநாயகத்தை அவமானப்படுத்தியிருந்தது.
மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியொன்று பல்வேறு அரசியல் தளங்களில் தோன்றின. மத்திரியின் தவறுகளை எதிர்ப்பது என்ற தலையங்கத்தில் மகிந்த ஆதரவு வட்டம் ஒன்றும் உருவாகியது.
தமிழர்கள் மத்தியிலிருந்து மைத்திரியின் அரசியலுக்கு எதிராக உருவான கூட்டங்கள் மகிந்தவைத் தண்டிப்பது குறித்தும், மகிந்தவின் ஆட்சியில் நடைபெற்ற அழிப்புக்கள் தொடர்பாகவும் மூச்சுக்கூட விடவில்லை.
பேரினவாதிகளின் வாக்கு எண்ணிக்கை குறைந்துவிடலாம் என்பதற்காக மகிந்த மீதான எந்த நடவடிக்கைக்கும் தயங்கிய மைத்திரி-ரனில் அரசு தன்னை நல்லாட்சி என அழைத்துக்கொண்டதை தமிழ் மக்களும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் கேலிக் கூத்காகவே கருதினர்.
இதன் மறு வினையாக மைத்திரி தனது எதிரியைத் தானே பலப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவத்ற்கு முன்பதாக மைத்திரி ரனில்-ரஜித சேனாரத்ன ஆகியோரிடையேயான பேச்சுகள் நடைபெற்றன. இப் பேச்சுக்களில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதா என்ற தகவல்களை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம்.