Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவலத்தில் வாழும் மக்களுக்குப் பிச்சை போட்ட சினிமாக் கூத்தாடிகள்!

rajnikanthசினிமா மோகத்தால் பல தசாப்தங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்த தமிழ் நாட்டின் தலை நகரம் இப்போது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மூடிய இரவில் நீருக்குள் லட்சக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மக்களின் சொத்தான கலையை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றியதில் சினிமாவின் பங்கு முதன்மையானது. கலை என்பதை மக்களைச் சிந்திக்கவிடாமல் தடுக்கும் ஆயுதமாகப் பயன்படுத்திய திறமை இந்திய அதிகாரவர்க்கத்திற்கு அமைந்திருந்த அளவிற்கு வேறெங்கும் இருந்ததில்லை. மக்களைச் சுரண்டிக் கொழுத்த சினிமா ஹீரோக்களுக்காக குழுக்களாகப் பிரிந்து மோதிகொள்ளும் அளவிற்கு தமிழ் நாடு பின் தங்கிய நிலைக்குச் சென்றிருந்தது. சினிமா கதாநாயகர்கள், இயக்குனர்கள் போன்ற பிரபலங்கள் அரசியல் தலைவர்களாகவும் முதலமைச்சர்களாகவும் மாறினர்.

கொடிய மழை சினிமாக் கதாநாயகர்களின் முகத்திரைகளை வெள்ளத்தில் அடித்துச் சென்றிருக்கிறது. வரிக்கு வரி என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களே, என விழித்து மேடைகளில் கொச்சத் தமிழில் முழங்கும் ரஜனிகாந் தமிழ் நாடு மக்களிடம் சுரண்டியவை பல பில்லியன்களை தாண்டும்.

ரஜனிகாந் தமிழ் நாட்டின் குழந்தைகளுக்கும் தெரிந்த பிராண்ட். கலைக் கொள்ளையில் சுருட்டிக்கொண்ட பணத்தில் வெறும் பத்துலட்சம் ரூபாய்களை மட்டுமே ரஜனிகாந் வழங்கியுள்ளார். தம்மை வாழ வைக்காத தெய்வங்களுக்காக நிதி வழங்கிய பல தெலுங்கு சினிமா நடிகர்கள் ரஜனியை விட அதிக பணத்தை வழங்கியுள்ளனர். சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் 5  லட்சம் ரூபாய்களும் 600 பிஸ்கட் பக்கட்டுகளும் வழங்கியுள்ளார். சூர்யா 25 லட்சம் மட்டும் வழங்கியுள்ளார்.

தமிழக அரசின் அவமானகரமான புறக்கணிப்பால் மருத்துவமனைகளில் கூட வசதியின்றி மக்கள் மரணித்துப் போகின்றனர். நச்சுப் படிந்த நீரினுள் ஒரு சமூகத்தையே மூழ்கடித்த பின்னரும் அவர்களை மீட்க தமிழக அரசு மறுக்கும் போது, உலகம் முழுவதுதிலுமிருந்து மக்கள் சென்னையை நோக்கி உதவி வழங்க முன்வருகிறார்கள் என்பது மனிதாபிமானம் செத்துப் போய்விடவில்லை என்பதைப் பறைசாற்றுகிறது. சென்னையின் முற்றத்தில் வாழும் கலாச்சாரக் கொள்ளையர்களான சினிமாக் கூத்தாடிகள் தம்மை வாழவைத்தவர்களுக்குப் பிச்சைபோடக்கூட தயக்கம் காட்டுகின்றனர்.

சினிமாக் கூத்தாடிகளின் ஆளுமையிலிருந்த கூட்டத்தை வெள்ளம் விடுதலை செய்யட்டும்!

Exit mobile version