Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியத் தேர்தலில் பாசிஸ்ட்டுக்களைப் போன்றே உலகின் ஏனைய பகுதிகளிலும்

antisocialsபிரித்தானிய தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புக்களில் ஆட்சியிலிருக்கும் பழமைவாதக் கட்சி முன்னணியிலுள்ளது. இரண்டாவது இடத்திலுள்ள தொழிற்கட்சியை விட இரண்டு வீதம் பழமைவாதக் கட்சி முன்னணியிலுள்ளது. கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் கட்சியோ, அன்றி இடதுசாரிக் கடசி எனக் கூறிக்கொள்ளும் வலதுசாரிக் கட்சியான தொழிற்கட்சியோ பாரளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பன்மையைப் பெற்றுக்கொள்ள இயலாது என முன் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஆக, பழமைவாதக் கட்சி நிறவாதக் கட்சியான பிரித்தானிய சுதந்திரக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயலலாம் என மேலும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பிரதான கட்சிகளும் பல்தேசிய நிறுவனங்களின் பிரதிநிதிகளாக அரச நிர்வாகத்தை நடத்தினாலும், பழமைவாதக் கட்சியின் பாசிசத்தை நோக்கிய ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என ஜனநாயகவாதிகள் கருதுகின்றனர்.

பின் தங்கிய கருத்துக்களை முன்வைக்கும் பிரதமர் டேவிட் கமரன் தலைமையிலான பழமைவாதக் கட்சிக்கு பொதுவாக ஜனநாயக சக்திகளிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை.

இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் புதிய வரவான நிறவாதக் கட்சி (UKIP) 12 வீதமான வாக்குக்களைப் பெறும் என்பது மனிதாபிமானிகளையும் ஜனநாயகவாதிகளையும் அச்சம் கொள்ளச் செய்கிறது.

இவ்வாறான அடிப்படை வாத, தேசிய வெறியுடன் கூடிய நிறவாதக் கட்சிகளின் பங்கு அதிகார வர்க்கத்திற்கு அவசிமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்தேசிய வியாபார நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரித்தானிய அதிகாரவர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் கீழ் அணிகளையும், தொழிலாளர்களையும் வறுமையின் எல்லைக் கோடுவரை நகர்த்தி வந்திருக்கின்றது. இதனால் கடந்த பத்து வருடங்களாக உழைக்கும் மக்களின் பல்வேறு போராடங்களும் நடைபெற்றன.

உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுக அணிதிரள ஆரம்பித்த வேளையில் UKIP போன்ற தேசியவாதக் கட்சிகளை அதிகாரவர்க்கம் உருவாக்கிக் களத்தில் இறக்கியுள்ளது.

ஏனைய நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகின்றவர்களால் பொருளாதாரம் கலாச்சாரம் வேலைவாய்ப்பு போன்றன பாதிக்கப்படுவதாக பிரித்தானிய சுதந்திரக் கட்சி மக்கள் மத்தியில் நச்சுவிதைகளைத் தூவ ஆரம்பித்தது.

இதனால் அதிகாரவர்க்கத்திற்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும் எதிரான மக்களின் உணர்வு வெளி நாட்டவர்களுக்கு எதிராக திசைதிருப்படுகிறது. இதனால் பிரித்தானிய சுதந்திரக் கட்சிக்கு பல்தேசிய நிறுவனங்கள் சிலவும் நிதி வழங்கி வருகின்றன.

ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகள் போராட்டமாக மாற்றமடையாமல் தடுப்பதற்காக அடிப்படைவாதிகளையும், நிறவாதிகளையும், இனவாதிகளையும் உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்துவதன் பின்னணியில் உளவு நிறுவனங்களும் செயற்படுகின்றன.

இவ்வாறான கட்சிகள் உலகம் முழுவதும் முளைவிடுகின்றன. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, குறுக்குவழிகளைக் கையாண்டு உழைக்கும் மக்களின் போராடங்களைத் திசைதிருப்பும் இக்கட்சிகள் மனிதகுலத்தின் அருவருப்பான சாபக்கேடுகள்.

பிரித்தானியாவில் பிரித்தானிய சுதந்திரக் கட்சி(UKIP), பிரான்சில் தேசிய முன்னணி(FN), ஜேர்மனியில் பெடிகா, இலங்கையில் பொதுபல சேனா, இந்தியாவில் ஆ.எஸ்.எஸ், தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி போன்று உலகின் ஏனைய பாகங்களிலும் இக்கட்சிகள் மனித குலத்தின் நாகரீகத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றன.

மனிதர்களைக் குறுகிய எண்ணம் கொண்டவர்களாக மாற்றும் இப்பாசிசக் கட்சிகள் சமுதாயத்தின் ஒவ்வொடு மூலையிலுமிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்..

Exit mobile version