உலகம் முழுவதும் இன்றைய வலதுசாரி அரச அதிகாரங்கள் ஒளிவு மறைவின்றி சமூகத்தின் அடி நிலையிலுள்ள உழைக்கும் மக்கள் மீதான கொடூர தாக்குதலை நடத்திவருகின்றது. இந்தியாவில் குலக் கல்வி முறை மதவாத அரசால் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. பிரித்தானியாவில் கொரோனாவிற்குப் பின்னைய காலத்தில் நடை பெற்ற உயர்தர பரீட்சையில் சமூகத்தின் கீழணியில் உள்ள மக்கள் பிரிவினர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பல்கலைகழக நுளைவிற்கான உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் சமூகமளிக்க முடியாத நிலையில் அரசு புதிய தரப்படுத்தல் முறை ஒன்றை அறிமுகப்படுத்திற்று. அதன் அடிப்படையில் பரீட்சையின்றி ஆசிரியர்கள் எதிர்வுகூறலின் அடிப்படையில் பரீட்சைப் பெறுபேறுகளை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்தது.
கடந்த வாரம் பரீட்சை முடிவுகள் நாடாளாவிய அடிப்படையில் வெளியிடப்பட்ட போது ஆசிரியர்களால் எதிர்வுகூறப்பட்ட முடிவுகள் 39 வீதத்தால் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டிருந்தது.
A* மற்றும் A பெறுபேறுகளைப் பெற்ற தனியார் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாதவாறு 4.7 வீதத்தால் அதிகரித்திருந்தது.A பெறுபேறுகளைப் பெற்ற தனியார் கல்லூரி மாணவர்களின் தொகை 49 வீதத்தால் அதிகரித்திருந்தது.
இதற்கு எதிராக அரச பாடசாலைகளின் அதிபர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போன்றன போர்கொடி உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக இங்கிலாந்து முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
ஒரு சில குறித்த தனியார் கல்லூரிகளைத் தவிர பெரும்பாலானவற்றின் வழமையான பெறுபேறுகள் அரச பாடசாலைகளை விட குறைவானதாக காணப்படும் நிலையில் பரீட்சை அற்ற கொரோனா முடிவுகள் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
பொதுவாகவே தம்மை வலதுசாரிகளாக அடையாளப்படுத்திக்கொள்ளும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களின் குழந்தைகளும் இதனால் தாக்கமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.