ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டுமா என்ற கருத்துக்கணிப்பில் வாக்களித்த பிரித்தானிய மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரத்தைப் பொதுவாக வலதுசாரி நிறவாதக் கட்சிகளே தலைமை தாங்கின. புரட்சிகர இடதுசாரிச் சிந்தனையும், ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பு முகாமும் பலமடைந்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்ள நிறவாதக் கட்சிகள் வெளியேற்றத்திற்கான முகாமைத் தலைமை தாங்கின.
போலந்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் ரூமேனியர்களுக்கும் எதிரான தாக்குதல்களை இக் கட்சிகள் நேரடியாகவே முன்னெடுத்தன. பல்தேசிய வியாபார ஊடகங்களும் கூட இக் கட்சிகளின் ஊதுகுழல்களாகச் செயற்பட்டன.
இவை அனைத்துக்கும் அதிகமாக புலம்பெயர் தமிழர்களின் ஒரு பெரும் பகுதியினரும் இந்தக் கட்சிகளின் பிரச்சாரங்களோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டனர்.
‘தீவிர வலதுசாரிகள்’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் இக் கட்சிகள் அடிப்படையில் நாஸிகளின் கருத்தோட்டத்தைக் கொண்டவர்கள்.
நாஸி நிறவாதிகள் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள போலந்து நாட்டவரின் கலாச்சார மையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலின் போது நாஸி சின்னங்கள் அடங்கிய பிரசுரங்களை தாக்குதல் நடத்தியவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். தவிர, கேம்பிட்ஜ்ஷயர் பகுதியில் போலந்து நாட்டு குடியேறிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
தவிர, நாட்டின் பல பகுதிகளில் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களும் சுவரொட்டிகளும் ஆங்காங்கு காணப்பட்டன. கலாச்சார மையத்தின் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானியப் போலிசார் விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
இதற்கு மத்தியில் பேர்மிங்காம் பகுதியில் ஒரு இஸ்லாமியப் பெண் வெள்ளையர்களின் குழுவொன்றினால் சூழப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்தப் பெண்ணை மிரட்டியதாக ரிவிட்டரில் மற்றொரு பெண் பதிவிட்டுள்ளார். மிரட்டியவர்கள் தாம் உங்களை வெளியேறுமாறு வாக்களித்துள்ளோம் எனக் கூறினர் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா ஐரோப்பாவிலிருந்து வெளியேறினாலோ அன்றி அதற்கு முன்பதாகவோ தமிழர்கள் போன்ற குடியேறிகளின் மீதே அடுத்த தாக்குதல் நடத்தப்படும் என்பதற்கு இந்த இஸ்லாமியப் பெண் மீதான மிரட்டல் சிறந்த உதாரணம்.
பிரித்தானியாவிலிருந்து போலந்து, மற்றும் ரூமேனிய மக்களை வெளியேற்றுவதற்காக வாக்களித்த தமிழர்களில் பலர் தமக்கு எதிராகத் தாமே வாக்களிக்கிறோம் எனத் தெரியாமல் ஆதிக்க மமதையில் செயற்பட்டுள்ளனர்.
குறுக்கு வழிகளில் ஈழத்தைப் பிடித்துவிடலாம் என அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்துகொண்டு மக்களை ஏமாறும் தமிழ்த் தலைமைகளும், அவர்களோடு வெவ்வேறு வழிகளில் இணைந்து செயற்படும் தனி நபர்களும் பின் தங்கிய புலம்பெயர் தமிழ் சமூகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
தவிர, தமிழ்த் தேசியத்தின் பெயரால் புலிச் சின்னம், பிரபாகரனின் உருவப்படம் ஆகியவற்றின் துணையுடன் தமிழ் நாட்டில் அரசியல் நடத்தும் தமிழ் இனவாதிகள், மலையாளத் தொழிலாளர்களையும்,
தமிழ் இனவாத அடிப்படையில் தெலுங்கர்கள், மற்றும் மலையாளிகள் போன்றோரை வெளியேற்றும் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான் போன்ற ஆபத்தானவர்கள் தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட போதிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இக் குழுக்களுக்கு இன்னும் ஆதரவுண்டு.
தமது தாய் தந்தையருக்கு மாறாக புலம்பெயர் புதிய தலைமுறையினர்களில் பலர் தமிழ் இனவாதக் கருத்தியலை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் புலம்பெயர் இளைய சமூகத்தின் கருத்துக்கள் நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளன.
ஷிரோமி மோகன்