புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்ப் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பணத்திலும், தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கலிலும், விளம்பரங்களின் தயவிலும் வியாபாரம் நடத்தும் இந்த ஊடகங்கள் புலம்பெயர் நாடுகளிலுள்ள பிழைப்புவாதிகளின் நலனை உறுதிப்படுத்த வேண்டிய தேவையை முன்வைத்துச் செயற்படுகின்றன.
தேசியத்தின் பெயரால் அப்பாவி மக்களின் வாழ்க்கையைச் சுரண்டிக் கொழுத்த இப் பிழைப்புவாதிகள், ஊடகங்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர். இலங்கைப் பேரினவாத அரசால் சூறையாடப்பட்ட மக்கள் கூட்டத்தின் எஞ்சிய பகுதிகளைக் கூடக் கொள்ளையடிக்கத் தயாராக தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் இப் பிழைப்புவாதிகள், மக்களின் கண்ணீரையும், இரத்தைத்தையும் மூலதனமாக்கிக் கொள்கின்றனர். நாளை மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிபடையப் போகிறது எப்ன்பது குறித்தெல்லாம் அவர்கள் துயர்க்கொள்வதில்லை. பணம்.. பணம்.. பணம்.. என்பது மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம்.
இவர்கள் வடக்குக் கிழக்கில் தமது பினாமிகளைத் தொடர்ச்சியாகத் தேடினார்கள். இறுதியில் அவர்கள் கண்டுபிடித்த மூன்று முத்துக்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர்.
வன்னிப் போருக்குப் பின்னர் நடைபெற்ற பேரழிப்பான சுன்னாகம் நீர்ப் பிரச்சனை யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதையும் அழிக்கும் நிலை தோன்றியுள்ள போதும், அழிப்பத் துரிதப்படுத்திய விக்னேஸ்வரன் தன்னைப் பொருத்தமான பிழைப்புவாதியாக புலம்பெயர் எஜமானர்களுக்கு அடையாளம் காட்டினார்.
நடந்த முடிந்த கொலைகளின் குற்றவாளிகளைத் தண்டிக்கோரும் விக்னேஸ்வரன் குழு நடந்துகொண்டிருக்கும் அழிப்பின் பங்காளி.
இவற்றை மீறி, விக்னேஸ்வரனுக்கு புலம்பெயர் ஊடகங்கள் ஒளிவட்டம் கட்டுவதன் நோக்கம் என்ன?
சுரேஷ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழு பற்றித் தெரிந்துகொண்டும் அவரை தேசியவாதியாக்கி மக்களுக்கு உண்மையை மறைக்கும் ஊடகங்களின் நோக்கம் என்ன?
தமிழின அழிப்பிற்குத் துணை போகும் இவர்களுக்கு எதிராக மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் இயக்கங்கள் சொந்தப் பலத்தில் தோன்றவேண்டும். அவ்வாறான அமைப்பு தனது அரசியலைத் தானே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். தேவையானால் புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் பற்றுள்ளவர்கள் அதற்குப் பக்கபலமாக அமையாலம்.