புலம்பெயர் நாடுகளில் ஈழப்போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழித்துவரும் மாபியா பினாமிக் குழுக்களின் ஆசி பெற்ற விக்னேஸ்வரன், தனிப்பட்ட முறையில் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களை நானும் நேசிக்கின்றேன். அவரும் எனக்கு மிகுந்த கௌரவம் அளிக்கின்றார் என்று கூறியுள்ளார்.
மேலும் கூறிய விக்னேஸ்வரன், எமது எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ தவராஜா அவர்கள் அதே கட்சியைச் சேர்ந்தவர். எமது வேறுபட்ட கருத்துக்களை நாம் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம்.
ஆனால் மனிதாபிமான முறையில் நாமிருவரும் மிகவும் நெருக்கமாக உறவாடுகின்றோம். அண்மையில் அவருடன் சேர்ந்தே எமது அரசியல் முன்மொழிவுகளை கௌரவ திரு. கரு ஜெயசூரிய அவர்களிடமும் கௌரவ சம்பந்தன் ஐயா அவர்களிடமும் கையளித்தோம்.
இன்றைய அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் ஏனைய கட்சித் தலைவர்கள் தமது அரசியல் சிந்தனைகளை மாற்றிக் கொண்டு எம்முடன் இணைந்துகொண்டு அரசியலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகள் கூடுதலாகக் காணப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிலை ஏற்படுகின்ற போது ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை. எனக் குறிப்பிட்டார்.
வட மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையை தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பைப் படித்துப்பார்காமலேயே அங்கீகரித்ததாகக் கூறும் விக்னேஸ்வரன் அதன் சுய நிர்ணைய உரிமைக்கு எதிரான முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டார். சுன்னாகம் நிலக்கீழ் நீரை மாசாக்கிய பல்தேசிய நிறுவனத்தைப் பாதுகாக்க போலி நிபுணர் குழு ஒன்றை ஐங்கரநேசனுடன் இணைந்து உருவாக்கினார்.
வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஜனநாயகம் மீட்கப்படுவதாக ராஜபக்ச குடும்பத்துடன் உலாவந்த டக்ளஸ் தேவானந்தாவை மதிப்பதாகக் கூறும் விக்னேஸ்வரன் தமிழ்ப் பேசும் மக்களின் ஆபத்தான எதிரிகளில் ஒருவர்.