Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை முழுவதையும் அழிப்பதற்கான நல்லாட்சியும் அதன் தமிழினவாத மறுபக்கமும்!

volkswaganஇலங்கையின் அரசியலை சிங்களப் பேரினவாதமாகவும், தமிழ் இனவாதமாகவும், இவை இரண்டையும் மையப்படுத்திய மற்றொரு அரசியலாகவும் மட்டும் வகைப்படுத்தி மையப்பிரச்சனைகளைத் திசைதிருப்பும் நிலையில் இலங்கை எதிர்ப்பின்றிச் சூறையாடப்படுகின்றது. குளியாப்பிட்டியாவில் ஜேர்மனிய கார் நிறுவனமான வொல்க்ஸ்வகன் இன் உற்பத்தி ஆலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்தின் சுற்றுச் சூழலை நாசப்படுத்தும் வலுவுள்ள உற்பத்தி ஆலை தொடர்பாக இதுவரை யாரும் எதிர்ப்புக்குரல் எழுப்பியதில்லை.

களனி ஆற்றில் கொக்கோ கோலா நிறுவனம் உற்பத்திக் கழிவுகளை வெளியேற்றியதன் பலனாக ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் குடி நீர் நச்சாக்கப்பட்டதை அந்த நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்குவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டு இரண்டு வருடங்களாகியும் அத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

ஹேலிஸ் நிறுவனம் வெலிவேரியாவில் நடத்திய சட்டவிரோத இரப்பர் உற்பத்தியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் குடி நீர் வழங்கப்படவில்லை. அதே போன்று சுன்னாகம் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு டீசலினால் நாசப்படுத்தப்பட்ட இரண்டு லட்சம் மக்களின் அடிப்படைத் தேவைகள் மீளமைக்கப்படவில்லை. ஊழல் மலிந்த வட மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசனின் கூட்டுச் சதியினால் சுன்னாம் பிரதேசத்தை அழித்த நிறுவனம் பாதுக்கப்பட்டுள்ளது.

முழு இலங்கையையும் அன்னிய நாடுகளின் கழிவறையாக மாற்றும் மைத்திரி – ரனில் அரசிற்கு நல்லாட்சி அரசு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உலகின் நடக்கும் ஒவ்வொரு நகர்வையும் இனவாதக் கண்ணோடு மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குச் சேகரிக்கும் தமிழ்க் கட்சிகள் இவை அனைத்தையும் மூடி மறைப்பதில் இலங்கை அரசிற்குத் துணை செல்கின்றன.

தவிர, ஆசியாவில் அதி உயரமாக கட்டடத்தைக்கொண்ட வியாபார மையம் ஒன்றைக் கட்டியெழுப்பும் பணியை அல் அமான் என்ற நிறுவனம் இலங்கை அரசின் ஆசியுடன் ஆரம்பித்துவிட்டது. வடக்கில் பலாலி விமானப்படைத்தளம் விரிவுபடுத்தப்படவுள்ளது. பேரினவாதம் இழையோடும் இலங்கையின் ஆளும் கட்சிகளின் ஆட்சியும், தமிழ் இனவாதக் கட்சிகளும் இலங்கையைச் சுறையாடும் பல் தேசிய வர்த்தக நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு பாராளுமன்றக் கதிரைகளுக்கான அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Exit mobile version