வன்னி இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்களையும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தையும் மட்டும் அழிப்பதற்காக நடத்தப்படவில்லை. கொலைகளின் கோரமும், அவலக்குரல்களும் மக்களை நீண்டகால அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிறிய நிலப்பரப்பிலிருந்து ஒலித்த கூக்குரல்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் பின்புலத்தில் நீண்டகாலத்திற்கு எதிர்ப்புப் போராட்டங்களே தேவையற்றது என்ற உளவியலை மக்கள் மத்தியில் தோற்றுக்கும் நோக்கத்தைக் கொண்டது.
படுகொலைகளின் பின்னர், தமிழ் பேசும் மக்களைக் கழுகுகள் போன்று சூழ்ந்துகொண்ட தமிழ் பிழைப்புவாதத் தலைமைகள் இனப்படுகொலையின் தொடர்ச்சியான நோக்கத்தை முன் கொண்டு செல்கின்றன.
ஒரு மக்கள் கூட்டத்தின் மீது தொடர்ச்சியாகத் திட்டமிட்டு வன்முறை பிரயோகிக்கப்படும் போது அந்த மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதுவே அரசின் ஆயுத வன்முறையாக அமையுமானால் மக்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவ்வாறான ஒரு அரசியல் சூழலில் தோன்றியதே தமிழ் பேசும் மக்களின் ஆயுதம் தாங்கிய இயக்கங்கள். இதனை மறுத்து ஆயுதம் தாங்கிய இயக்கங்களை வன்முறையாளர்களாகக் இனம்காட்ட முற்படுவதும், வன்முறை அழிவுகளுக்கே வழிவகுக்கும் என இணக்க அரசியலை முன்மொழிவதும் இலங்கை அதிகாரவர்க்கத்தின் போருக்குப் பின்னான தந்திரோபாயமாக உள்ளது.
கிழக்கு லண்டனில் புலம்பெயர் குழுக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடலில் வட மாகாணத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுதி வாசித்த ஆவணம் ஒன்றில் இலங்கை அதிகாரவர்க்கத்தின் மேற்குறித்த கருத்தியல் நேரடியாகவே வெளிப்படுத்தப்படுகிறது. தமிழ்ப் பண்புகள் என்று ஆரம்பிக்கும் விக்னேஸ்வரன் எதிர்ப்பு அரசியலை வன்முறை என்கிறார். “எமது ஆயுததாரிகள் அதிகாரபலத்துடன் இருந்த வேளையிலும் மக்கள் வாய்திறக்க முடியாத நிலையிலேயே இருந்தனர். இயக்கங்கள் கூறியதே சட்டமாக இருந்தது, ஆகவே வன்முறையற்ற வாக்குவாதம் தவிர்ந்த சூழலை நாங்கள் உருவாக்குவோம்’ என்று சூழுரைக்க புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்ததனர். இலங்கை அதிகாரவர்க்கம் மக்களின் போராட்டங்களை அழிக்கும் கருத்தியலை மிகவும் தந்திரமாக மக்கள் மத்தியில் செலுத்திவருகின்றது என்பதற்கு விக்னேஸ்வரனின் உரை சிறந்த குறியீடு.
வட மாகாண சபைக்கான தேர்தலில் வாக்குக் கேட்பதற்கு முன்பே தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், புலிகளின் பிடிக்குள் இருந்தமையால் இதுவரை அரசியலில் ஈடுபட முடியவில்லை என்று கூறினார்.
இந்துத்துவத்தையும் கடவுள் பக்தியையும் வன்முறைக்கு மாற்றீடாக முன் மொழிந்த விக்னேஸ்வரன், யாப்பு மாற்றம் போன்ற அரசியல் திருத்தங்கள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் முன்வைக்கிறார். அதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் குடும்பத் தலைமையின் முதல் குடியாக விளங்கிய சவுமியமூர்த்தி தொண்டைமானை உதாரணமாகக் காட்டுகிறார்.இந்த நூற்றாண்டின் அடிமைகளாக மலையக மக்கள் திறந்த வெளிச் சிறைக்குள் வாடுவதற்கு தொண்டைமான் என்ற அரசியல் வியாபாரி பிரதான காரணம் என்பதை இலங்கையில் வாழும் எந்த ஜனநாயகவாதிக்கும் தெரிந்த குழந்தைப்பிள்ளை விவகாரம்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்த முற்பட்ட புலம்பெயர் குழுக்கள், அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரண்டு தேர்தலில்களில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததும், விக்னேஸ்வரனை பின் தொடர ஆரம்பித்தனர். இன்று விக்னேஸ்வரன் வாசித்து முடித்த உரையில் இலங்கை பேரினவாத அதிகாரவர்க்கத்தின் தொனி இழையோடுவது மட்டுமன்றி ஆயுததாரிகள் என விடுதலைப் போராளிகளை விளித்தமையும் புலம்பெயர் குழுக்களை விசனத்திற்கு உள்ளாக்கியிருக்க வேண்டும். ஆனால், விக்னேஸ்வரனின் உரை முடிந்த பின்னரும் புலம்பெயர் குழுக்களின் தலைவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை என்பதன் வெளிப்பாடே. புதியவர் ஒருவர் மாட்டிக்கொள்ளும் வரை விக்னேஸ்வரனே தமிழ்த் தேசியத்தின் உள்ளூர்ப் பிரதிநிதியாக வாழ்வார்.
ஏகபோக நாடுகளில் ஒன்றை அல்லது அதிகாரத்திலுள்ள சில தனி நபர்களைப் வளைத்துப்போட்டுக்கொண்டு தாம் நினைத்ததைச் குறுக்கு வழிகளில் சாதிப்பதே விடுதலை என்றும் போராட்டம் என்றும் நம்பும் புலம்பெயர் குழுக்கள் இதுவரை கால இழப்புக்களையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்துகின்றன.
எதிர்ப்புக் காட்டாமல் இணங்கிப் போவதே தமிழ்க் கலாசாரம் என விக்னேஸ்வரன் முறையிடுவது, தமிழ் மரபு அல்ல. திருக்குறளும், ஐம்பெரும் காப்பியங்களும் மனிதாபிமானத்தோடு போர்க்குணத்தையும் போதித்தன. நாமார்க்கும் குடியல்லோம் என பக்தி இலக்கியக் காலம் ஆரம்பிக்கிறது. சங்கப் பலகை அமைத்து அறம் கோருவதிலிருந்தே மன்னர்களின் காலம் ஆரம்பிக்கிறது. இந்துத்துவம் தமிழ் மரபை ஆக்கிரமித்த போதும் பெரியார் போன்ற அறிஞர்கள் திராவிட மரபை தோற்றுவித்தனர்.
ஆக, விக்னேஸ்வரனின் இணக்க அரசியல் எந்த வடிவில் வந்தாலும் நிராகரிக்கப்பட வேண்டும். மக்களின் கரங்களில் வழங்கப்படும் முதலாவது ஆயுதம் அவர்களை அணிதிரட்டுவதே. இன்று வரைக்கும் வெற்றிடமாகக் காணப்படும் மக்கள் திரள் அமைப்புக்களை தோற்றுவிப்பதும், பேரினவாதத்திற்கும் இலங்கை அதிகாரவர்க்கத்திற்கும் எதிராக எதிர்ப்பரசியலை, வாக்குப் பொறுக்கும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராக முன்னெடுப்பதும் இன்றைய எமது தேவை.