Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூட்டமைப்பில் பிரச்சனைகள் இல்லை:புலம்பெயர் நண்பர்களை ஏமாற்றிய விக்னேஸ்வரன்

vickneswaranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தனக்கும் எதுவித பிரச்சனைகளும் இல்லை என வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாகச் சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அது தவறானது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களுக்கு ஆதரவாக விக்னேஸ்வரன் செயற்பட்டார். புலம்பெயர் நாடுகளிலுள்ள இணைய ஊடகங்களும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை ஆதரித்தவர்களும் இவ்வாறான பிரச்சாரங்களைப் பரவலாக மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக நடந்துகொண்ட விக்னேஸ்வரன் இன்று தலைகீழாக மாறியுள்ளார்.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்ப் பிழைப்புவாதிகளுக்கு ஏற்ற அரசியலை முன்வைக்க முனைந்த சீ.வீ.விக்னேஸ்வரன் இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளார்.

வடமாகாண ஆட்சியைக் கைப்பற்றிய மறுகணமே மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட விக்னேஸ்வரன், மைத்திரி ஆட்சிக்குவந்ததும் இனப்படுகொலை குறித்துப் பேச ஆரம்பித்தார்.

இலங்கையில் தமக்கு ஏற்ற சந்தர்ப்பவாதிகளைத் தேடிக்கொண்டிருந்த புலம்பெயர் பிழைப்புவாதிகள் இதனால் உற்சாகமடைந்து விக்னேஸ்வரனோடு நிபந்தனைகள் அற்ற சமரசத்திற்கு வந்தனர்.

ஒரு புறத்தில் சுன்னாகத்தில் அழிப்பு நடத்திய பல்தேசிய வர்த்தக நிறுவனத்தைப் புனிதப்படுத்தி காப்பாற்றிய விக்னேஸ்வரன் மறுபுறத்தில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றினார்.

இன்று பிரச்சினையோ அல்லது முரண்பாடுகளோ த.தே.கூட்டமைப்பிற்குள் இல்லை எனவும் கூட்டமைப்பிலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னுடன் சுமுகமான முறையிலேயே பழகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version