“எந்த ஒரு அரசாங்கமும் தமிழர்களுக்கு நன்மை செய்வோம் என்று வெளிப்படையாகச் சிங்கள மக்களிடையே தெரியப்படுத்தத் தயங்குகின்றது. காரணம் அந்த அளவுக்குச் சிங்களச் சகோதர சகோதரிகள் மனதில் நஞ்சை விதைத்துள்ளார்கள் அரசியல்வாதிகள்.
தமிழர்களுக்குத் தயை காட்டினால் தமக்குத் தேர்தலில் சிங்கள வாக்காளர்கள் தர அடையாளம் போட மாட்டார்களோ என்ற பயத்தில் எல்லாச் சிங்கள அரசியல் தலைவர்களும் கரவாகத்தான் எமக்கு உறுதிமொழிகளைத் தருகின்றார்கள். இது அபாயகரமானது.”
இவ்வாறு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செல்வநாயகத்திலிருந்து விடுதலை இயக்கங்கள் ஈறாக விக்னேஸ்வரன் வரைக்கும் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் சிங்கள அதிகார வர்க்கம் எவ்வாறு சிங்கள மக்களை நச்சூட்டுகிறது என்று கூறி வாக்குப் பலத்தை அதிகரிக்கிறார்கள். ஆக சிங்கள அதிகார வர்க்கத்தைப் பலவீனப்படுத்த வேண்டுமானால் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அதிகாரவர்க்கத்தின் நய வஞ்சக நிலைப்பாடு குறித்து அவர்களுக்குக் கூற வேண்டும். குறிப்பாக சிங்கள அதிகாரவர்கத்தால் சுரண்டப்படும் சிங்கள உழைக்கும் மக்கள் மத்தியில் போராட்ட நியாயம் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
சுன்னாகத்தில் பல்தேசிய நிறுவனம் ஒன்று தமிழ் உழைக்கும் மக்களின் நீரையும் நிலத்தையும் அழித்தபோது அதனை நியாயப்படுத்திய விக்னேஸ்வரன் போன்றவர்கள் சிங்கள உழைக்கும் மக்களை அணுகுவார்கள் என எதிர்பார்ப்பது மடமைத்தனம்.
நாளாந்த உணவிற்கே வழியின்றித் தற்கொலை செய்துகொள்ளும் தொலைதூர சிங்களக் கிராமவாசி சுரண்டப்படுவதிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் சிறுபான்மைத் தேசிய இனங்கள் விடுதலை அடைய வேண்டும் என அவர்களிடம் கூற வேண்டும்.
இன்று சிங்கள உழைக்கும் மக்களையும் தமிழ் உழைக்கும் மக்களையும் இனவாத நச்சூட்டி அதிகாரவர்க்கங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அன்னியர்களுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் மக்களின் அவலத்தை அடகுவைத்துப் பிழைப்பு நடத்துகின்றன.
சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம் என்று கூறி வாக்குக் கேட்ட தமிழரசுக் கட்சியால் ஏமாற்றப்பட்ட தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது.
இலங்கையில் முஸ்லீம், மலையக மக்களையும் சிங்கள உழைக்கும் மக்களையும் இணைத்தால் பேரினவாத சிங்கள அதிகாரவர்க்கம் சிறுபான்மையாகிப் பலமிழக்கும் என்ற குறைந்தபட்ச சமன்பாட்டைக்கூடப் புரிந்துகொள்ள மறுக்கும் வாக்குப் பொறுக்கிகள் அழிவுகளின் ஆதாரசக்திகள். இவர்கள் அனைவரைக்கும் அப்பால் தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் இலங்கையின் பெரும்பான்மை மக்களால் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே வெற்றிப்பாதையை நோக்கிச் செல்ல முடியும், இல்லையெனில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிழைப்புவாதிகளின் கைகளில் சிக்குண்டு அழிவை மட்டுமே விளைவாகத் தரும்..