பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 29.09.2020 முற்பட்ட 24 மணி நேரத்தில் 7143 நோயாளிகளைப் பாதித்துள்ளது.நோய் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை இதுவே அதிக எண்ணிக்கை என அரசு அறிவித்துள்ளது. மேலும் 71 நோயாளிகள் தொற்றால் மரணித்துள்ளனர். ஜுன் மாதத்தின் பின்னர் இதுவே அதிக மரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்துவிட்டதாகக் கணிக்கும் நிபுணர்கள், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.அரசு வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ள நிலையில் வலுவான எதிர்கட்சியோ எதிரணியோ இல்லாத நிலையில் ஆளும் பழமைவாதக் கட்சி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எழுமாறாகச் செயற்படுவதாக ஜெரமி கோர்பின் போன்ற சமூகச் செயற்பாடாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த பத்துவருட வலதுசாரி பழமைவாதக் கட்சியின் ஆட்சியின் சிக்கன நடவடிக்கைகளால் பிரித்தானிய அரசின் சமூக நலத் திட்டங்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன. மூன்றாவது உலக நாடுகளுடன் ஒப்பிடும் போதும், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போதும் பிரித்தானியாவின் இலவச மருத்துவம் இன்னும் முன்னிலையிலேயே காணப்பட்டாலும் பத்துவருட சிக்கன நடவடிக்கைகளால் மருத்துவத்திற்கான நிதித் தொகை 30 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
பிரித்தானிய சுகாதார அமைச்சு 93 மில்லியன் பவுண்ஸ்கள் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக முதலிட்ட போதிலும், 2121 ஆம் ஆண்டு இறுதிவரை மருந்து பாவனைக்கு வராது என அரசு அறிவித்துள்ளது.