முப்பது வருட கால போராட்டத்தின் பின்னர் பெரும்பாலான தமிழ் மக்கள் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளை கடுமையாக வெறுப்பதுடன் பொதுமக்களின் அபிவிருத்திக்கான நிதியை கையாடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும் என்றும் அரசியலில் இருந்து முற்றாக ஒதுக்கப் படவேண்டும் என்றும் கருதுகிறார்கள். இந்த உணர்ச்சியே ஊழலுக்கு எதிரான விசாரணைகளை தடுக்கும் வகையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவர முயன்றவர்களுக்கு எதிராக மக்களை எழுச்சி கொள்ள வைத்தது. ஊழலுக்கு எதிரான இந்த தமிழ் மக்கள் எழுச்சியை தமிழ் தேசியத்துக்கான எழுச்சி என்று சிலர் காட்ட முயன்ற போதிலும் உண்மையில் ஊழலினால் வெறுப்புற்று இருக்கும் சிங்கள முஸ்லீம் மக்கள் மத்தியில் கூட வட மாகாண முதலமைச்சர் மீது ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தவர் என்ற வகையில் ஆதரவு அதிகரித்து இருக்கிறது. ஆனால் குற்றம் நிருபிக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் மீது எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையையும் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் இதுவரை எடுக்காதது மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருப்பதுடன் தமிழ்க் கட்சிகளின் மீது அவநம்பிக்கை கொள்ள வைத்து இருக்கிறது. குறைந்த பட்சம் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். தன்னால் நியமிக்கப்படும் விசாரணைக்குழுவை ஏற்றுக் கொள்ள முடியாவிடின் ஊழல் குற்றச்சாட்டுக்களை நிதி மோசடி புலனாய்வு பிரிவிடம் (FCID) ஒப்படைப்பேன் என்று தெரிவிக்கும் முதலமைச்சர் ஏற்கெனவே குற்றம் நிருபிக்கப்பட்ட அமைச்சர்கள் மீது எடுக்கப் போகும் நீதி வழங்கும் நடவடிக்கையானது வெளிப்படையாகவும் விரைவாகவும் இருக்கவேண்டும் என்று நல்லாட்சியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஏனைய இரு அமைச்சர்களும் இந்தமுறை முதலமைச்சரின் மேலதிக விசாரணைகளை எதிர்கொள்ள மறுப்பு தெரிவிப்பதுடன் தமது ஆதரவாளர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை அமைத்து கண்துடைப்பு விசாரணை ஒன்றை நடத்தக் கோரிஇருப்பது மக்களை வெறுப்பேற்றியுள்ளது. போதாக்குறைக்கு அமைச்சர் சத்தியலிங்கம் மக்களை ஏமாற்றி முழு முட்டாள்கள் ஆக்கும் வகையில் FCID இடம் தானாகவே ஆஜராகி தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்து விசாரணைக்கு உட்படுத்தி தன்னை சுற்றவாளியாக நிரூபிப்பேன் என்று கேலியாக கருத்து தெரிவித்து வருகிறார். இன்று வரை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த ஏமாற்று பிரச்சாரங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஊழல் விருட்சமாக வளர்ந்து எங்கும் கிளை பரப்பி நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஏனைய சிரேஷ்ட தமிழ் தலைவர்கள் மௌனத்தைக் கலைத்து கட்சி பேதமின்றி ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கட்சியின் எதிர்காலத்தை தியாகம் செய்வதா அல்லது ஊழலில் ஈடுபட்ட தலைவர்களை தியாகம் செய்வதா என்ற சத்தியசோதனைக்கு உட்பட்டு இருக்கிறார்கள். இதேவேளை முதலமைச்சர் அல்லது அவரது திணைக்களத்தில் ஊழல் இடம் பெற்று இருந்தால் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்ட மாகாண சபையினால் அதை நீதியாக விசாரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் முதலமைச்சருக்கு கட்டுப்படாத ஒரு சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும். தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது சுமத்தும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருந்தால் அவருடைய அதிகாரத்துக்கு கட்டுப்படாத லஞ்ச ஊழல் ஆணைக் குழு அல்லது நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு அல்லது பாராளுமன்றத்தினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அல்லது ஜனாதிபதி விசாரணைக்குழு போன்ற ஒரு அமைப்பில் நேர்மையாக முறைப்பாட்டை செய்து முதலமைச்சருக்கு எதிரான விசாரணையை ஏற்படுத்த வேண்டும். நீதிபதியான முதலமைச்சர் அத்தகைய குற்றச்சாட்டுகளை சூழ்ச்சி செய்யாமல் எதிர்கொள்வார் என்று நம்புகிறேன். அதை விடுத்து முதலமைச்சர் ஒரு ஊழல் குற்றச்சாட்டை வைத்தால் நாங்களும் பதிலுக்கு ஒரு குற்றச்சாட்டை வைப்போம் என்ற நாடகமும் முதலமைச்சர் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிறுத்தினால் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை நிறுத்துவோம் என்று பேரம் பேசுவதும் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்தாலும் ஊழல் என்னும் நோய் சமூகத்தில் இருந்து அகற்றப்பட்டாலே உண்மையான சமூக அபிவிருத்தி எட்டப்படும். அதை விடுத்து தமிழ்நாட்டைப் போல் ஆட்சியாளர்கள் தங்களுக்கும் தங்களுடைய வாரிசுக்களுக்கும் மாத்திரம் சொத்து சேர்த்து அபிவிருத்தி செய்யும் நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோமா என்பதே இன்று தமிழ் மக்களின் பிரதான கவலையாக இருக்கிறது.
வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்
03.07.2017