2009 ஆண்டு இறுதிப்பகுதியில் புறச் சூழலின் மாற்றத்தால் தோன்றிய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதையும் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவிற்கு உட்படுத்தியுள்ளது. காலாவதியாகிப் போய்விட்ட இன்றைய உலக முதலாளித்துவப் பொருளாதாரம் கோவிட் 19 இற்கு முன்பதாகவே நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. அனைத்து உலக நாடுகளிலும் மொத்த உள்ளக உற்பத்தி விகிதம் சரிவடையத் தொடங்கியிருந்தது. மூலப் பொருட்களின் விலைச் சரிவு, மூலதன முடக்கம் என்பவற்றை இதற்கான பிரதான காரணங்களாக முன்வைத்தனர். நோய்த் தொற்றினால் இச் சரிவு மேலும் சிக்கல்களுகு உட்பட புதிய மூலதனச் சுழற்சிக்கான திட்டங்களை மேற்கு நாடுகள் அறிமுகம் செய்ய, பல மூன்றாம் உலக நாடுகள் மீள முடியாத புதிய வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டன.
இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளின் அரசுகள் தமது பாசிச அரச கட்டமைப்பை நிறுவன மயப்படுத்த இக் காலப்பகுதியைப் பயன்படுத்திக்கொண்டன .
மேற்கு நாடுகள் புதிய மூலதனச் சுழற்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பை சில விரல் விட்டு எண்ணக்கூடிய பல்தேசிய நிறுவனங்களிடம் கையளித்துவிட்டு, நோய்த் தொற்றை மக்களிடம் பரவ அனுமதித்தன.பிரித்தானிய உட்பட ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அவற்றின் இறுதி நோக்கம் பெரு நிறுவனங்களின் இலாப நோக்கை அடிப்படையக கொண்டிருந்தமையால் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முழுமையான முடக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை.
மிகக் குறுகிய காலத்தில், பிரித்தானியாவின் அனைத்து சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. உணவகங்கள், பெருந்தெரு வியாபார நிலையங்கள் எல்லம் தங்கு தடையின்றி இயங்கின. பாடசாலைகள் திறக்கப்பட்டன. இது குறித்து ஜுலை மாத இறுதியிலேயே ஸ்கொட்லாந்து பிரதமர் விரிவான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
நேற்றைய 24.10.2020 பதிவான புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 23012. இத்தொகை கடந்த வாரத்தோடு ஒப்பிடும் போது 40 வீதம் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுக்றது.
குளிர்காலம் ஆரம்பித்த நிலையில், வீடுகளதும் தொழில் நிறுவனங்களதும் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்குமாறும் இதனால் கொரோனா பரவலைக் குறைக்கலாம் எனவும் ,அரச ஆலோசகர்கள் குழு கூறியுள்ளது.